42,000 டெங்கு நோயாளர்கள் பதிவு; 25% மாணவர்கள்

ஜுன் 12, 2023 - 13:25
ஜுன் 12, 2023 - 13:41
42,000 டெங்கு நோயாளர்கள் பதிவு; 25% மாணவர்கள்

நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 43,000 ஆக அதிகரித்துள்ளதுடன் அவர்களில் 25 வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் இதுவரை 42,961 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இம்மாதம் மாத்திரம் 3,557 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், வீடுகள் மற்றும் பாடசாலைகளைச் சுற்றியுள்ள நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.

இவ்வருடத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 21,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதிகபட்சமாக கம்பஹா மாவட்டத்தில் 9,554 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 9143 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 2,738 பேரும் பதிவாகியுள்ளனர்.

குருநாகல், புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இதேவேளை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு காணப்படுகின்ற அதேவேளை 67 MOH பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்டம் இன்று (12) ஆரம்பமாகியுள்ள நிலையில், நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் பல டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை விமானப்படை மற்றும் கம்பஹா சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவினால் கெரவலப்பிட்டிய கழிவு அகற்றும் நிலையத்தில் நுளம்பு பெருகுவதைத் தடுப்பதற்காக ட்ரோன்களைப் பயன்படுத்தி இரசாயனங்கள் தெளிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!