கிழக்கில் தொல்பொருள் இடத்தில் பௌத்த விகாரை கட்டுவதற்கு எதிர்ப்பு
தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து அரிசிமலை ஆரண்யத்தின் தலைவரான பனாமுரே திலகவன்ச தேரர் இந்த விகாரையை நிர்மாணித்து வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் இந்து ஆலயத்திற்கு அருகில் உள்ள தொல்பொருள் பிரதேசத்தில் சில வருடங்களாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பௌத்த விகாரையின் பணியை நிறுத்துமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டம், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட, பெரியகுளம் கிராமத்தில் அமைந்துள்ள, உச்சிப்பிள்ளையார் மலையடிவாரத்தில், நிர்மாணிக்கப்பட்டு வரும் ஆலயத்தின் பணியை நிறுத்துமாறு கோரி, கிராம மக்கள் கடந்தவார இறுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
35 தமிழ் குடும்பங்கள் வசிக்கும் பெரியகுளம் கிராமத்தில் நாகதம்பிரான் கோவிலுக்கு அருகில் உள்ள இந்த பௌத்த விகாரையின் கட்டுமான பணிகள் 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த மலையில் புதையல் இருப்பதாக 2016ஆம் ஆண்டு பரவிய வதந்தியை அடுத்து, கிராம மக்களும் வேறு பிரதேச மக்களுத் அந்த காணியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், பின்னர் அந்த காணி தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான காணி என அரச வர்த்தமானி வெளியிடப்பட்டதாகவும் பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த இடத்தில் பௌத்த சமயத்துடன் தொடர்புடைய எச்சங்கள் இருப்பதாக தொல்பொருள் திணைக்களம் கூறுவதாக கிராம மக்கள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து அரிசிமலை ஆரண்யத்தின் தலைவரான பனாமுரே திலகவன்ச தேரர் இந்த விகாரையை நிர்மாணித்து வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு மாகாணங்களின் மற்றும் தமன்கடுவ பிரதேசத்தின் பிரதம சங்கநாயக்கரான குறித்த தேரர், உள்நாட்டு மற்றும் சர்வதேச எதிர்ப்புகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாணத்தின் தொல்பொருன் மரபுரிமைகளை நிர்வகிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் முக்கியமான உறுப்பினராவார்.
பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பில் இருந்த கரையோர நிலத்தை அபகரிக்க முற்பட்ட போது எதிர்ப்புத் தெரிவித்த முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களை, திலகவன்ச தேரரின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் பதிவாகியிருந்தது.