சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாற்றப்பட்ட பழைய ரயில் பெட்டிகள்
சுற்றுலாப் பயணிகள் சுற்றுச்சூழலையும் ரயில் பாதையையும் இலகுவாக அவதானிக்கும் வகையில் பழைய ருமேனிய ரயில் பெட்டிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

இலங்கை ரயில் திணைக்களத்தின் இரத்மலானை பிரதான இயந்திர பொறியியல் உப திணைக்களத்தினால் 5.5 மில்லியன் ரூபாய் செலவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பழைய நிராகரிக்கப்பட்ட ருமேனிய ரயில் பெட்டிகள் சுற்றுலா ரயில் பெட்டிகளாக புதுப்பிக்கப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகள் சுற்றுச்சூழலையும் ரயில் பாதையையும் இலகுவாக அவதானிக்கும் வகையில் பழைய ருமேனிய ரயில் பெட்டிகள் புனரமைக்கப்பட்டு கூரை அகற்றப்பட்டுள்ளதாக, பிரதான இயந்திர பொறியியல் உப திணைக்களத்தின் கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மற்றொரு அறை முற்றிலும் மரத்தைப் பயன்படுத்தி புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், பயணிகளுக்கு வசதியான இருக்கைகள் கொண்ட அறையொன்று தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பழைய ரயில் பெட்டிகள், உள்ளூர் ரயில்வே பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களால் நவீனப்படுத்தப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
கைவிடப்பட்ட இந்த ரயில் பெட்டிகளை புனரமைப்பதன் மூலம் இன்று நாடு எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலையில் இந்த நிறுவனம் நாட்டுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்வதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். (News21)