நிலச்சரிவில் இருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட பணமும் தங்கமும் உரிமையாளரிடம் ஒப்படைப்பு
தேடுதல் நடவடிக்கைகளின் போது ரூ.300,000 பணம், சுமார் ரூ.5 மில்லியன் மதிப்புடைய தங்க நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குரான்கெத்த (hanguranketha) ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பேரிடர் நிவாரண நடவடிக்கைகளின் போது, சேதமடைந்த வீட்டின் இடிபாடுகளில் இருந்து பணம் மற்றும் தங்க நகைகளை இலங்கை இராணுவத்தினர் மீட்டு, அவற்றை உரிய உரிமையாளரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர்.
ஹங்குரான்கெத்த பிரதேச செயலகத்துடன் இணைந்து செயல்பட்ட இராணுவத்தினர், இடிபாடுகளுக்கு மத்தியில் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது ரூ.300,000 பணம், சுமார் ரூ.5 மில்லியன் மதிப்புடைய தங்க நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட அனைத்து பெறுமதியான பொருட்களும் நேற்று (14) முறையான நடைமுறைகளின் கீழ், உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
பேரிடர் சூழ்நிலைகளிலும் மனிதாபிமானத்துடன் செயல்பட்டு பொதுமக்களின் சொத்துகளை பாதுகாப்பது இராணுவத்தின் முக்கிய பொறுப்பாகும் எனவும், இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.