சகல அரச ஊழியருக்கும் பாரிய சம்பள அதிகரிப்பு
2025 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அரச நிதி நிலைமைகளையும் கருத்தில் கொண்டு கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தை திருத்துவதற்கான யோசனைக்கே, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இதன்படி, அரச சேவையின் ஆகக் குறைந்த ஆரம்ப மாதாந்தச் சம்பளத்தை ஆகக்குறைந்தது 24 வீதத்தால் அதிகரித்து வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவுடன் மொத்தச் சம்பளத்தை 55,000 ரூபா வரை அதிகரித்து, ஏனைய அனைத்துப் பதவிகளுக்குமான அடிப்படைச் சம்பளத்தை அதற்கேற்புடைய வகையில், சீர் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள சம்பள முறைமையை 2025 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அரச நிதி நிலைமைகளையும் கருத்தில் கொண்டு கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.