சிறுமியை பணயம் வைத்து காதலியை கடத்தியவருக்கு வலைவீச்சு!
சிறுமியை கடத்திய நபர், தன்னுடன் காதலில் இருந்த பெண்ணை தொடர்புகொண்டு, தன்னை சந்திக்கும்படி கட்டாயப்படுத்தினார். இல்லையெனில் கடத்தி வைத்துள்ள உனது அண்ணனின் மகளை (சிறுமி) கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

களுத்துறை - மொரகஹஹேனவில் உள்ள வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் 7 வயது சிறுமியை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
சிறுமியின் தாய், சம்பவ தினமாக திங்கட்கிழமை (13) செய்த முறைப்பாட்டையடுத்து, மொரகஹஹேன பொலிஸார் தொடர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
மொரகஹஹேன, கொதிகமுவ பிரதேசத்தில் உள்ள தமது வீட்டிலிருந்து சந்தேகநபர் தனது மகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக முறைப்பாட்டில் தாய் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டாளர் வீட்டில் தனது தாய், கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் கணவரின் தங்கையுடன் வசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டாளரின் கணவரின் தங்கை, சிறுமியை கடத்திச் சென்ற சந்தகநபருடன் காதல் தொடர்பில் இருந்து, அதனை முறித்துக்கொண்டமையே சிறுமியின் கடத்தலுக்கு காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
காதலியையும் கடத்திய சந்தேகநபர்
அதேவேளை, சிறுமியை கடத்திய நபர், தன்னுடன் காதலில் இருந்த பெண்ணை தொடர்புகொண்டு, தன்னை சந்திக்கும்படி கட்டாயப்படுத்தினார்.
இல்லையெனில் கடத்தி வைத்துள்ள உனது அண்ணனின் மகளை (சிறுமி) கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து, அப்பெண், அவரைச் சந்திக்க கெஸ்பேவ பிரதேசத்திற்கு சென்றமையால் சிறுமியை முறைப்பாட்டாளரின் உறவினர் ஒருவரின் வீட்டில் விட்டுவிட்டு, காதலியை சந்தேகநபர் கடத்திச் சென்றுள்ளார்.
மேற்படி உறவினரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் கடத்தப்பட்ட சிறுமியை மீட்டு, தாயிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடத்தலுக்கு பயன்படுத்திய கார் கண்டுபிடிப்பு
குறித்த இருவரும் சுமார் 10 வருடங்காக காதல் தொடர்பில் இருந்ததாகவும் எனினும், சந்தேகநபர் போதைப்பொருளுக்கு அடிமையாகியதால் 2 மாதங்களுக்கு முன் காதலி தொடர்பை துண்டித்ததாக மொரகஹஹேன பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், பத்தேகம பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அது காதலியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கார் என்பது தற்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண், சந்தேகநபர் மற்றும் மேற்படி இரு கடத்தல்களுக்கும் துணை போன சந்தேகநபரின் நண்பர் ஆகியோரைக் கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மொரகஹஹேன பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.