200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று சுகயீன விடுமுறை

தபால் அலுவலகம், அளவையிலாளர், கிராம அலுவலர்கள், உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

ஜுலை 8, 2024 - 10:53
200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று சுகயீன விடுமுறை

அரச சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08) மற்றும் நாளை (09) சுகயீன விடுமுறையை அறிவித்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தபால் அலுவலகம், அளவையிலாளர், கிராம அலுவலர்கள், உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்கங்கள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அரச மற்றும் மாகாண பொது முகாமைத்துவ சங்கத்தின் தலைவர் என்.எம்.விஜேரத்ன தெரிவித்தார்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக தபால் ஊழியர்களும் நேற்று (07) மாலை 4 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவை சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

அத்துடன், ஆசிரியர்கள் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று பணிக்கு சமூகமளித்துள்ள போதிலும், நாளை சுகயீன விடுமுறையை அறிவிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதேவேளை, சுகாதார நிலையம் தொடர்பான பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிப்பதில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் தாதியர் சங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளன.

எவ்வாறாயினும் இன்று தொழிற்சங்கப் பிரதிநிதிகள் திட்டமிட்டு மேற்கொள்ளவுள்ள பணிப்புறக்கணிப்பினால் அரச சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!