கண்டி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஜாஃப்னா கிங்ஸ்!
லங்கா பிரீமியர் லீக்: ஜாஃப்னா கிங்ஸ் அணியானது இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரில் நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் காலே மார்வெல்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அதேசமயம் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கண்டி ஃபால்கன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு பதும் நிஷங்க - குசல் மெண்டிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த் நிலையில், பதும் நிஷங்க 18 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ரைலீ ரூஸோவ் 7 ரன்களிலும், அவிஷ்க ஃபெர்னாண்டோ 11 ரன்களிலும், கேப்டன் சரித் அசலங்க 4 ரன்களுக்கும், தனஞ்செய டி சில்வா 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் இணைந்த அஸ்மதுல்லா ஒமார்ஸாய் ஓரவுளவு தாக்குப்பிடித்து ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 26 ரன்களைச் சேர்த்தார்.
அதேசமயம் தொடக்க வீரராக களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குசல் மெண்டிஸ் சதமடித்து அசத்தியதுடன், 12 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 105 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் ஜாஃப்னா கிங்ஸ் அணியானது 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களைக் குவித்தது. கண்டி ஃபால்கன்ஸ் அணி தரப்பில் சத்துரங்க, ஹஸ்னைன் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கண்டி அணிக்கு தினேஷ் சண்டிமல் - ஆண்ட்ரே ஃபிளெட்சர் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் தினேஷ் சண்டிமல் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஆண்ட்ரே ஃபிளெட்சர் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸ் 26 ரன்களையும், வநிந்து ஹசரங்க 13 ரன்களிலும், கமிந்து மெண்டிஸ் 32 ரன்களையும் என ஓரளவு பங்களிப்பை வழங்கி விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஏஞ்சலோ மேத்யூஸ் 18 ரன்களிலும், தசுன் ஷனக 3 ரன்களிலும், சதுரங்க டி சில்வா ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
கண்டி அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்தில் இருந்த ரமேஷ் மெண்டிஸ், பவுண்டரியும் சிக்ஸர்களையும் என விளாச அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் நான்கு ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
கடைசி பந்தில் ரமேஷ் மெண்டிஸால் 2 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கண்டி ஃபால்கன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
ஜாஃப்னா கிங்ஸ் தரப்பில் ஃபேபியன் ஆலன் 4 விக்கெட்டுகளையும், விஜயகாந்த் வியாஸ்காந்த் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணியானது ஒரு ரன் வித்தியாசத்தில் கண்டி ஃபால்கன்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு சீசன் எல்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கும் ஜாஃப்னா கிங்ஸ் அணி முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் இப்போட்டியில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவிய கண்டி ஃபால்கன்ஸ் அணியானது நூழிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.