கோலிக்கே ஆப்பு வைத்த பட்லர்... 100ஆவது போட்டியில் 100 ரன்கள்.. 6ஆவது சதம் அடித்து சாதனை!

பட்லர் சிக்ஸர் அடித்து தனது 6ஆவது ஐபிஎல் சதத்தை பதிவு செய்ததோடு அணிக்கு வெற்றியும் தேடிக் கொடுத்துள்ளார்.

ஏப்ரல் 7, 2024 - 11:59
கோலிக்கே ஆப்பு வைத்த பட்லர்... 100ஆவது போட்டியில் 100 ரன்கள்.. 6ஆவது சதம் அடித்து சாதனை!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 19ஆவது ஐபிஎல் போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. 

இதில், முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்துள்ளது. இதில், அதிகபட்சமாக விராட் கோலி 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இது ஜோஸ் பட்லரின் 100ஆவது ஐபிஎல் போட்டியாகும். 

இதில், ஜெய்ஸ்வால் 2ஆவது பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து பட்லருடன் கேப்டன் சஞ்சு சாம்சன் இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

இதில், சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸ் உள்பட 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி வரை அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 57 பந்துகளில் 94 ரன்கள் எடுத்திருந்தார். 

கடைசி 6 பந்தில் ஆர் ஆர் அணியின் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது. கடைசி ஓவரை கேமரூன் க்ரீன் வீசினார். முதல் பந்திலேயே பட்லர் சிக்ஸர் அடித்து தனது 6ஆவது ஐபிஎல் சதத்தை பதிவு செய்ததோடு அணிக்கு வெற்றியும் தேடிக் கொடுத்துள்ளார்.

பட்லர் 58 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸ் உள்பட 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

மேலும், விளையாடிய 4 போட்டிகளிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஆர்சிபி விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடம் பிடித்துள்ளது. ஆர்சிபிக்கு இன்னும் 9 போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்க 7 அல்லது 8 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

எனினும், இன்னும் ஓரிரு போட்டிகளில் தோல்வி அடைந்தால் கூட ஆர்சிபி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறும் நிலை உண்டாகும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!