முன்னாள் காதலனின் புகைப்படங்களை பகிர்ந்த யாழ். பெண் கணினி பொறியாளர் கைது
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அந்த இளைஞன், தனது தனிப்பட்ட புகைப்படங்கள் முன்னாள் காதலியால் வட்ஸ்அப் குழு ஒன்றின் மூலம் பகிரப்பட்டதாகக் கூறி CIDயின் சைபர் குற்றப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் கணினி பொறியாளர் ஒருவர், தனது முன்னாள் காதலனின் தனிப்பட்ட புகைப்படங்களை வட்ஸ்அப் குழுவொன்றில் பகிர்ந்த குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது கடந்த செவ்வாய்க்கிழமை, ஜனவரி 13ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட இளைஞனுக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையில் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதல் உறவு இருந்ததாகவும், பின்னர் ஏற்பட்ட பிரிவின் காரணமாக அந்தப் பெண் மன அழுத்தம் மற்றும் வெறுப்பு உணர்வுகளை அனுபவித்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையிலேயே பழிவாங்கும் நோக்கில் அந்தப் புகைப்படங்களை பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அந்த இளைஞன், தனது தனிப்பட்ட புகைப்படங்கள் முன்னாள் காதலியால் வட்ஸ்அப் குழு ஒன்றின் மூலம் பகிரப்பட்டதாகக் கூறி CIDயின் சைபர் குற்றப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த பெண் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.



