முஜீப் ரஹ்மானை கண்டுகொள்ளாத பங்களாதேஷ்.. மேத்யூஸை மட்டும் டைம் அவுட் செய்தது ஏன்? சரியா? தவறா?
இதே பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடும் போது, பேட்டிங் செய்வதற்காக வேகமாக களமிறங்கிய முஜீப் உர் ரஹ்மான் அப்டமன் கார்டை மறந்து களம் புகுந்தார்.

இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸை டைம் அவுட் முறையில் அவுட் செய்த பங்களாதேஷ் வீரர்களின் செயல்பாடுகள் சரியா, தவறா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது.
உலகக்கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து பங்களாதேஷ் அணி விளையாடியது. இந்த போட்டியின் 24.1 ஓவரின் பந்தில் சமரவிக்ரம ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், அதனை தொடர்ந்து ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார்.
மைதானத்திற்கு வந்த பின் அவர் ஹெல்மட் அணிந்த போது, அதன் பட்டை அறுந்திருந்தது தெரிய வந்தது. இதனால் உடனடியாக மாற்று ஹெல்மட்டை கொண்டு வருமாறு மேத்யூஸ் கேட்டு கொண்டார்.
ஆனால் ஹெல்மட் கொண்டு வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த பங்களாதேஷ் அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட வீரர்கள் நடுவர்களிடம் தாமதம் குறித்து முறையிட்டனர். அப்போது நடுவர்கள் தரப்பில், அப்பீல் செய்கிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஏமாற்றி விட்டார்கள்....என் வாழ்க்கையில் இப்படி ஒரு அணி தரம் தாழ்ந்து பார்த்ததில்லை - மேத்யூஸ் தாக்கு
அதற்கு ஷகிப் அல் ஹசன் தரப்பில் டைம் அவுட் முறையில் அப்பீல் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மேத்யூஸ் டைம் அவுட் முறையில் முதல்முறையாக ஆட்டமிழந்து வெளியேறினார். பங்களாதேஷ் வீரர்களின் செயல்பாடுகள் சரியா என்ற விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இது ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட்டுக்கு எதிராக இருப்பதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். என்ன தான் விதிகளின் படி அவுட் என்றாலும், சமரவிக்ரம ஆட்டமிழந்து வெளியேறிய 10வது வினாடியிலேயே ஏஞ்சலோ மேத்யூஸ் மைதானத்திற்குள் வந்துவிட்டார். இதன்பின் உயிர் காக்கும் ஹெல்மட் சேதமாக இருப்பதை அறிந்து அதனை மாற்ற நேரம் எடுத்து கொண்டுள்ளார்.
இதே பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடும் போது, பேட்டிங் செய்வதற்காக வேகமாக களமிறங்கிய முஜீப் உர் ரஹ்மான் அப்டமன் கார்டை மறந்து களம் புகுந்தார்.
இதன்பின் நினைவு வந்து, வீரர்களை கொண்டு வர சொல்லி மைதானத்திலேயே கார்டை மாற்றி கொண்டார். அப்போது பங்களாதேஷ் வீரர்கள் முஜீப் உர் ரஹ்மானுக்கு எதிராக நடுவர்களிடம் எந்த அப்பீலும் கோரவில்லை.
ஆனால் மேத்யூஸ்-க்கு மட்டும் பங்களாதேஷ் அப்பீல் செய்து டைம் அவுட் செய்துள்ளது. மேத்யூஸ் வேண்டுமென்றே ஹெல்மட்டை காரணமாக வைத்து நேரத்தை தாமதம் செய்திருந்தால் கூட பங்களாதேஷ் அப்பீல் செய்ததில் தவறில்லை என்று கூறலாம். ஆனால் ஹெல்மட் பட்டை அறுபட்டிருந்ததை நேரடியாக ஷகிப் அல் ஹசனிடம் காண்பித்தும் அவர்கள் அப்பீலில் இருந்து பின் வாங்கவில்லை.
இதற்கு 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதிபெற வேண்டும் என்பதற்காகவே பங்களாதேஷ் அணி மோசமான வகையில் வெற்றி பெற முயற்சித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.