வெற்றி பயணத்தை தொடங்குமா டெல்லி? ராஜஸ்தானுடன் இன்று மோதல்
முதலாவது ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

17-வது ஐ.பி.எல். தொடரில் இன்று ஜெய்ப்பூரில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் தனது முதலாவது ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.
முதலில் ஆடி 193 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் அணி எதிரணியை 173 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது. பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன் (82 ரன்கள்), ரையான் பராக் (43 ரன்கள்) ஆகியோர் அசத்தினர். தங்களது வெற்றி உத்வேகத்தை தொடர ராஜஸ்தான் அணி தீவிரம் காட்டும்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடம் பணிந்தது. டெல்லி நிர்ணயித்த 175 ரன் இலக்கை 4 பந்துகள் மீதம் வைத்து பஞ்சாப் எட்டிப்பிடித்தது. எனவே அந்த அணியில் ஒரு சில வீரர்களாவது நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமானதாகும்.
தங்களுடைய வெற்றியை நீடிக்க ராஜஸ்தான் அணியும், வெற்றி கணக்கை தொடங்க டெல்லி அணியும் வரிந்து கட்டும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.