ராகுல், டி காக் அதிரடி ஆட்டம்... சிஎஸ்கேவை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரச்சின் ரவீந்திரா - அஜிங்கியா ரஹானே இணை தொடக்கம் கொடுத்தனர். 

ஏப்ரல் 20, 2024 - 11:20
ராகுல், டி காக் அதிரடி ஆட்டம்... சிஎஸ்கேவை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. 

லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். 

இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரச்சின் ரவீந்திரா - அஜிங்கியா ரஹானே இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் அதிரடி தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா ரன்கள் ஏதுமின்றி தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடும் முயற்சியில் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். 

பின்னர் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியின் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். 

இதில் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 35 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் ஷிவம் தூபே 3 ரன்களுக்கும், அதிரடி வீரர் சமீர் ரிஸ்வி ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் சிஎஸ்கே அணி 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இதையடுத்து ஜடேஜாவுடன் இணைந்த மொயீன் அலியும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரவீந்திர ஜடேஜா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

மறுபக்கம் ரவி பிஷ்னோய் ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்ட கையோடு 30 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலியும் விக்கெட்டை இழந்தார். 
இதனையடுத்து களமிறங்கிய மகேந்திர சிங் தோனி வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசியதுடன், கடைசி பந்திலும் பவுண்டரி அடித்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 57 ரன்களையும், மகேந்திர சிங் தோனி 9 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 28 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைக் குவித்தது. லன்கோ அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குர்னால் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். 
தொடக்கத்தில் நிதானம் காட்டிய இந்த இணை நேரம் செல்ல செல்ல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் அடுத்தடுத்து தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 134 ரன்களைக் குவித்து அணியை வலியான நிலைக்கு கொண்டுசென்றனர். 

அதன்பின் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 54 ரன்கள் சேர்த்த நிலையில் குயின்டன் டி காக், முஸ்தஃபிசூர் ரஹ்மான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரனும் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் முயற்சியில் இறங்கினார். 

அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் கேஎல் ராகுல் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 82 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் மதீஷ பதிரன பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜாவின் அபாரமான கேட்சின் மூலம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த நிக்கோலஸ் பூரன் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 8 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் 19 ஓவர்களில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. 
இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!