பொலிஸ் நிலையங்களுக்கு செலுத்தப்படும் வாடகை தொடர்பில் வெளியான தகவல்
நாடளாவிய ரீதியில் 607 பொலிஸ் நிலையங்கள் உள்ளதாகவும் அவற்றில் 121 பொலிஸ் நிலையங்கள் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட தனியார் கட்டிடங்களில் இயங்குவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

நாடளாவிய ரீதியில் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட கட்டிடங்களில் 121 பொலிஸ் நிலையங்கள் பராமரிக்கப்படுவதாகவும், அதற்காக அரசாங்கம் வருடாந்தம் 11 கோடி ரூபாயை செலவிடுவதாகவும் பொலிஸ் முகாமைத்துவப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
நாடளாவிய ரீதியில் 607 பொலிஸ் நிலையங்கள் உள்ளதாகவும் அவற்றில் 121 பொலிஸ் நிலையங்கள் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட தனியார் கட்டிடங்களில் இயங்குவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேல் மாகாணத்தில் தனியார் கட்டிடங்களில் இயங்கும் பொலிஸ் நிலையங்களுக்கு மாதாந்தம் 50 இலட்சம் ரூபாய் வாடகையாக செலவிடப்படுகின்றது.
அத்துடன், வடமாகாண பொலிஸ் நிலையங்களுக்கு 2,94,000 ரூபாயும், கிழக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு 2,33,000 ரூபாயும் வாடகையாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வடமேற்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு ஏழு இலட்சம் ரூபாயும், சப்ரகமுவ மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களுக்கு எட்டு இலட்சம் ரூபாயும் மாதாந்த வாடகையாக வழங்கப்படுகின்றது.
இதேவேளை, மத்திய மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு ஒன்பது இலட்சம் ரூபாயும், ஊவா மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாயும், தென் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாயும் மாதாந்த வாடகைப் பணமாக செலுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. (லங்காதீப)