ஆசிய கோப்பை 2023 - ஹிட்மேன் ஆடிய ருத்ரதாண்டவம்.. நேபாள அணியை பந்தாடிய இந்திய அணி!

ஆசிய கோப்பை 2023 : நேபாள அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

செப்டெம்பர் 5, 2023 - 11:00
செப்டெம்பர் 5, 2023 - 17:19
ஆசிய கோப்பை 2023 - ஹிட்மேன் ஆடிய ருத்ரதாண்டவம்.. நேபாள அணியை பந்தாடிய இந்திய அணி!

ஆசிய கோப்பை 2023 : நேபாள அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

ஆசியக் கோப்பை தொடரின் 5வது போட்டியில் நேபாள அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் என்பதால், இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 

இதன்பின் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். மழை பெய்ய வாய்ப்பிருந்தும் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதன்பின் பேட்டிங் செய்த நேபாள அணி 48.2 ஓவர்களில் 230 ரன்கள் குவித்தது. நேபாள அணி சார்பில் ஆசிஃப் ஷேக் 58 ரன்களும், சோம்பால் கமி 48 ரன்களும் சேர்த்தனர்.

ஆசிய கோப்பை 2023 - கொழும்பில் கொட்டும் கனமழை.. ஆசியக் கோப்பை போட்டிகள் மாற்றம்?

இந்திய அணி தரப்பில் சிராஜ் மற்றும் ஜடேஜா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்திய அணியின் வலிமையான பந்துவீச்சுக்கு எதிரான நேபாள அணி 230 ரன்கள் குவித்தது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.

இதன் பின் 231 ரன்கள் இலக்குடன் இந்திய அணியின் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி களமிறங்கியது. 2.1 ஓவர்களில் இந்திய அணி 17 ரன்கள் சேர்த்திருந்த போது கனமழை பெய்ய தொடங்கியது. 

சுமார் 1.30 மணி நேரம் நீடித்த மழை, 10 மணியளவில் நின்றது. இதன்பின் ஆட்டம் 10.15 மணிக்கு தொடங்கியது. அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி இந்திய அணி 23 ஓவர்களில் 145 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதன்பின் களமிறங்கிய ரோகித் சர்மா - சுப்மன் கில் இணை அதிரடியில் களமிறங்கியது. சுப்மன் கில் ஒரு பக்கம் பவுண்டரியாக விளாச, ரோகித் சர்மா இன்னொரு பக்கம் சிக்சராய் பொளந்து கட்டினார். 

இதனால் ரோகித் சர்மா 49 பந்துகளில் அரைசதம் கடக்க, சுப்மன் கில் 47 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் 14 ஓவர்கள் முடிவிலேயே இந்திய அணி 100 ரன்களை கடந்தது.

இதன்பின் இருவரின் அதிரடியும் அடுத்த கட்டத்திற்கு செல்ல, இறுதியாக இந்திய அணி 20.1 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 59 பந்துகளில் 74 ரன்களும், சுப்மன் கில் 62 பந்துகளில் 67 ரன்களும் சேர்த்தனர். 

இதன் மூலம் இந்திய அணி டிஎல்எஸ் விதிப்படி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. அதேபோல் ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கும் இந்தியா முன்னேறியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!