கடும் மழையால் 2 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகி உள்ள முதல் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக இது உள்ளது. இதுமட்டுமின்றி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.

நவம்பர் 15, 2023 - 11:51
கடும் மழையால் 2 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைய உள்ள நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகி உள்ள முதல் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக இது உள்ளது. இதுமட்டுமின்றி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.

இதனால் இன்று தமிழ்நாட்டில் அடுத்த 5 தினங்களுக்கு கனமழையும் பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் சென்னை மற்றும் புறநகர்பகுதிகளுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை கடந்த அக்டோபர் மாதம் வரை தமிழகம், புதுவை, காரைக்கல் பகுதிகளில் இயல்பை விட 43% குறைவாக பதிவாகி உள்ளது. 

பதிவான மழையின் அளவு 98 மி.மீ ஆனால் இந்த காலகட்டத்தின் இயல்பான அளவு 171 மி.மீ ஆகும். கடந்த 123 ஆண்டுகளில் 9ஆவது முறையாக குறைவான அளவு மழை பதிவாகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாகவும், 6 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், 17 மாவட்டங்ங்களில் இயல்பை விட மிக குறைவான அளவு மழையும் பதிவாகி உள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!