டி20 தொடரை வென்று பழிதீர்த்தது இந்தியா.. ஆஸ்திரேலியா படுதோல்வி!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4வது டி20 போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது.
சிறப்பாக ஆடிய ரிங்கு சிங் 46 ரன்களை விளாசி அசத்தினார். அதேபோல் ஆஸ்திரேலியா அணி தரப்பில் பென் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பின் 175 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ்ட் ஹெட் - ஜோஷ் பிலிப் தொடக்கம் கொடுத்தனர்.
தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடிய நிலையில், தீபக் சஹர் வீசிய 3வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 22 ரன்களை விளாசி தள்ளினார். இதனால் கேப்டன் சூர்யகுமார் யாதவ் உடனடியாக ஸ்பின்னரான ரவி பிஷ்னாயை அட்டாக்கில் கொண்டு வந்தார். அவர் வீசிய முதல் பந்திலேயே ஜோஷ் பிலிப் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆடுகளத்தில் ஸ்பின் இருப்பதை அறிந்து அடுத்த ஓவரை அக்சர் படேல் கைகளில் கொடுத்தார் சூர்யகுமார் யாதவ். அந்த ஓவரின் 4வது பந்தில் டிராவிஸ் ஹெட் சிக்சர் அடிக்க முயன்று பேட்டை சுழற்ற, அந்த பந்தில் டாப் எட்ஜாகி முகேஷ் குமார் கைகளில் கேட்சானது.
இதையும் படிங்க: சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு: முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களின் விவரம் இதோ!
இதனால் 31 ரன்களில் அவர் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 52 ரன்கள் சேர்த்திருந்தது. பின்னர் அக்சர் படேல் - ரவி பிஷ்னாய் இருவரும் அடுத்தடுத்து அட்டாக் மேல் அட்டாக் செய்தனர். இவர்களின் பந்தில் ரன்கள் சேர்க்க முடியாததால், ஆஸ்திரேலியா அணி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது.
இதனால் அடுத்த வந்த 8 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து தீபக் சஹர் அட்டாக்கில் வந்தார். அவரின் ஓவரில் டிம் டேவிட் 19 ரன்களிலும், ஷார்ட் 22 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் கடைசி 3 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற 47 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது கேப்டன் மேத்யூ வேட் களத்தில் அதிரடியாக பவுண்டரிகளை விளாசி தள்ளினார். இதனால் ஆட்டம் பரபரப்பானது. ஆனால் போதுமான அதிரடி இல்லாததால், கடைசி ஓவரில் வெற்றிக்கு 31 ரன்கள் தேவையாக இருந்தது. ஆவேஷ் கான் வீசிய கடைசி ஓவரில் 11 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது.
இதனால் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. அதேபோல் உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கும் இந்திய அணி பழி தீர்த்துள்ளது.