உலகக்கோப்பை இந்திய அணிக்கு  வரப் போகும் 3 வீரர்கள்.. பிசிசிஐ முன்வைத்த யோசனை

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்று இருக்கும் வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஜுலை 19, 2023 - 19:46
உலகக்கோப்பை இந்திய அணிக்கு  வரப் போகும் 3 வீரர்கள்.. பிசிசிஐ முன்வைத்த யோசனை

உலகக்கோப்பை தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கும் நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இதனால் இந்திய அணி 2 அணிகளை அனுப்ப முடிவு செய்துள்ளது. சீனியர் வீரர்களைக் கொண்ட அணி உலக கோப்பையிலும் இளம் வீரர்களைக் கொண்ட அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் களமிறங்க உள்ளன. இதனால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்று இருக்கும் வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் சில வீரர்களை கடைசி கட்டத்தில் மாற்றிக்கொள்ள icc அனுமதி அளித்திருக்கிறது. அதில் வீரர்களுக்கு காயம் அடிப்படையில் கூட அணியை மாற்றிக் கொள்ளலாம் அந்த வகையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம் பெற்றிருக்கும் மூன்று வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் கூட களமிறங்கலாம். அது யார் என்று தற்போது பார்க்கலாம்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ஜெய்ஸ்வால். அதிரடி வீரராக அறியப்படும் ஜெய்ஸ்வால் தற்போது டெஸ்ட் அணியில் தன்னுடைய திறமையை ஏற்கனவே நிரூபித்து விட்டார். 

ஐபிஎல் தொடரிலும் அதிரடியாக ஆடக்கூடிய ஜெய்ஸ்வால் இந்திய அணிக்கு கூடுதல் வீரராக கூட களமிறங்கலாம். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது ரிங்கு சிங். நடு வரிசையில் அதிரடியாக விளையாடக் கூடியவர்.

இந்திய அணிக்கு பினிஷிங் ரோலில் இன்னும் சரியான ஆள் கிடைக்கவில்லை. இந்த இடத்தை ரிங்கு சிங் நிரப்பி விட்டால் நிச்சயம் அவர் உலகக்கோப்பை தொடரின் மெயின் அணியிலே களமிறங்க கூடும். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆர்ஸ்தீப் சிங். எப்போதுமே சர்வதேச கிரிக்கெட்டில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் தேவை.

கடந்த உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இடது கை வேகப்பந்துவீச்சாளரான ஜாகிர் கான், நெஹ்ரா போன்ற வீரர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்த வகையில் ஆர்ஸ்தீப் சிங்கை அதே காரணத்திற்காக இந்திய அணி உலகக்கோப்பை தொடரிலும் பயன்படுத்த கூடும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!