பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்குள் கலகம்... தனிமைப்படுத்தப்பட்டாரா பாபர்... என்ன நடந்தது?
இதை வைத்து பார்க்கும் போது பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் சிறிதளவாவது உண்மை இருக்கக் கூடும் என தெரிகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்குள் கலகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அதை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மறுத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2023 உலகக்கோப்பை தொடருக்கு முன் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்ற போதே இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின் அணியில் விரிசல் ஏற்பட்டதாக பேசப்பட்டது.
ஆனால், அப்போது எந்த பிரச்சனையும் இல்லை எனக் கூறி பாகிஸ்தான் அணி, உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வந்தது. முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி, இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி நம்பிக்கையுடன் இருந்தது.
ஆனால், அடுத்து இந்தியா உடன் தோல்வி அடைந்த பிறகு அந்த அணியில் மீண்டும் பிரச்சனைகள் வெடித்ததாக செய்திகள் வலம் வரத் துவங்கின.
அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் தோல்வி அடைந்த பின் பாகிஸ்தான் அணியில் சில வீரர்கள் இடையே கைகலப்பு எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக இரண்டு வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக பாகிஸ்தானில் சில இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
மேலும், கேப்டன் பாபர் அசாம் மற்ற வீரர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டதாக ஒரு தகவலும் வெளியானது. ஆனால், இந்த தகவல்கள் எதுவும் உண்மை இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிக்கை ஒன்றை அவசர அவசரமாக ஆப்கானிஸ்தான் போட்டி துவங்கிய சில நிமிடங்களில் வெளியிட்டது.
அதே போல, ஆப்கானிஸ்தான் போட்டியின் போது பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி ஆகிய மூவரும் அருகருகே அமர்ந்து இருந்தனர்.
இதன் மூலம், பாகிஸ்தான் அணியில் விரிசல் இல்லை என காண்பிக்கப்பட்டது. ஆனால், ஆப்கானிஸ்தான் போட்டியிலேயே இடைவேளையில் அணி வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் முகமது நவாஸ் பேசினார். அப்போது பாபர் அசாம் அங்கே நிற்காமல் தனியே விலகி நின்றார்.
இதை வைத்து பார்க்கும் போது பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் சிறிதளவாவது உண்மை இருக்கக் கூடும் என தெரிகிறது.
பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலர் பாபர் அசாம் கேப்டனாக சிறப்பாக செயல்படவில்லை. அவரை நீக்க வேண்டும் என கூறி வருகின்றனர். அணிக்குள்ளும் அவருக்கு ஆதரவு இல்லை என்பதால் அவர் நிலைமை மோசமாக உள்ளது.