சிட்னி டெஸ்டில் இருந்து தன்னை நீக்கியது ஏன்? மனந்திறந்த ரோஹித்
10 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவிடம் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இழந்த இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் முதல் முறையாக வெளியேறியது.

ஆஸ்திரேலியாவில் நடந்த 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி, ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் முதல் போட்டியில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில், ரோஹித் தலைமையில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது.
மிடில் ஆர்டரில் திணறிய ரோஹித் சர்மா ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கியும் அரை சதத்தை கூட அடிக்காமல் தடுமாறினார். அதன் காரணமாக சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் அணியிலிருந்து நீங்கினார்.
அதனால், ஒரு டெஸ்ட் போட்டியில் தன்னைத் தானே நீக்கிக் கொண்ட முதல் இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையையும் ரோஹித் படைத்த நிலையில், பும்ரா தலைமையில் விளையாடிய இந்தியா தோல்வியை சந்தித்தது.
10 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவிடம் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இழந்த இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் முதல் முறையாக வெளியேறியது.
கம்பீருடன் ஏற்பட்ட சண்டையாலேயே ரோஹித் கடைசிப் போட்டியில் நீக்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், இந்தியாவின் நன்மைக்காகவும் சுப்மன் கில் விளையாட வேண்டும் என்பதற்காக தான் விளையாடவில்லை என ரோகித் கூறியுள்ளார்.
இது பற்றி பேசிய ரோஹித் “சிட்னி டெஸ்ட் போட்டியில் நான் களமிறங்கவில்லை. அதுதான் இந்திய அணிக்கும் கடைசி ஆட்டமாக அமைந்தது. அந்த டெஸ்ட் தொடரில் என்னால் பந்தை சரியாக அடிக்க முடியவில்லை. இன்னும் சில வீரர்களும் ரன்கள் சேர்க்க முடியாமல் திணறினர்.
அந்த நேரத்தில் சுப்மன் கில்லை நிச்சயமாக களமிறங்க வேண்டும் என்று ஆலோசித்தோம். அதற்கு முந்தைய டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடவில்லை. ஆனால் நிச்சயம் வரும் காலங்களில் என்னால் ரன்களை சேர்க்க முடியும்.
எப்போதும் ஒரு அணிக்கு என்ன தேவையோ, அதனை பொறுத்தே முடிவு எடுக்கப்பட வேண்டும். சில நேரங்களில் அந்த முடிவு சரியானதாக அமையலாம். சில நேரங்களில் மோசமான முடிவாக கூட இருக்கலாம்.” என்றார்.