இனி விக்கெட் எடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.. ஷமி செய்த ட்ரிக்.. கவாஸ்கர் அதிரடி
முகமது ஷமி இதற்கு நேர்மாறாக அணியில் வாய்ப்பின்றி இருந்த போது, மணிக்கணக்காக வேகப் பந்து வீசி பயிற்சி செய்து இருக்கிறார்.

2023 உலகக்கோப்பை தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டுமே ஆடி 9 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் முகமது ஷமி. இந்த நிலையில், முகமது ஷமி எப்படி இதை செய்தார் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விளக்கி இருக்கிறார்.
பொதுவாக வேகப் பந்துவீச்சாளர்கள் அதிக நேரம் வலைப் பயிற்சியில் ஈடுபட மாட்டார்கள். பயிற்சியாளர்களும், பிசியோதெரபிஸ்ட் ஆகியோரும் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். நீண்ட நேரம் பந்து வீசினால் ஏதேனும் உள்காயம் ஏற்படலாம் என்ற அச்சமே அதற்கு காரணம்.
வேகப் பந்துவீச்சாளர்கள் அதிகபட்சம் அரை மணி நேரம் தான் ஒரு நாளுக்கு பயிற்சி செய்வார்கள். கூடுதல் பயிற்சி வேண்டும் என்றாலும் காலை - மாலை என பிரித்து இரண்டு அரை மணி நேரம் பயிற்சி செய்வார்கள்.
ஆனால், முகமது ஷமி இதற்கு நேர்மாறாக அணியில் வாய்ப்பின்றி இருந்த போது, மணிக்கணக்காக வேகப் பந்து வீசி பயிற்சி செய்து இருக்கிறார்.
இதற்காக தன் பண்ணையில் சில பிட்ச்களை அவர் தயார் செய்து இருக்கிறார். அதில் தொடர்ந்து தினமும் தன்னால் இயன்ற வரை காலை, மாலையில் பந்து வீசி பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அதனால், அவரது துல்லியமான பந்துவீச்சு இன்னும் மெருகேறி இருக்கிறது.
பந்தை அதிகமாக ஸ்விங் செய்யவும் சரியான லென்த்தில் பந்தை பிட்ச் செய்யவும் இந்த பயிற்சி அவருக்கு உதவியாக இருந்துள்ளது. இதை அடுத்தே அவர் 2023 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.
அப்போது அவர் 17 போட்டிகளில் 28 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். உலகக்கோப்பை தொடரிலும் விக்கெட் வேட்டையாடி வருகிறார். இது பற்றி கவாஸ்கர் கூறுகையில், நிபுணர்கள், பயிற்சியாளர்கள் சொல்வதை எல்லாம் கேட்காமல் ஷமி நீண்ட நேரம் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
கபில் தேவ் இதே போலத் தான் செய்வார். தனது வீட்டில் பல பிட்ச்களை தயார் செய்து வைத்து தொடர்ந்து பந்து வீசிக் கொண்டே இருப்பார். ஷமியும் அதைத் தான் செய்துள்ளார். . இப்படி செய்தால் தான் பந்து வீச்சு துல்லியமாக மாறும். அதிக விக்கெட்கள் வீழ்த்த முடியும் என குறிப்பிட்டார்.