மும்பை இந்தியன்சை கேலி செய்த ஹர்திக் பாண்டியா.. வச்சு செய்யும் ரசிகர்கள்!
மும்பை அணியைப் பொறுத்தவரை அவர்கள் இந்திய இளம் திறமைகளை கண்டறிவதற்கு, ஒரு தனிக்குழுவை வைத்து கடுமையாக உழைப்பார்கள்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் 16 ஆண்டுகளில் தலா ஐந்து முறை என, 10 ஆண்டுகள் ஐபிஎல் தொடரை கைப்பற்றி இருக்கிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை அவர்கள் அனுபவ வீரர்களை வாங்குவார்கள். மேலும் ஆல்ரவுண்டர்கள் அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள்.
மும்பை அணியைப் பொறுத்தவரை அவர்கள் இந்திய இளம் திறமைகளை கண்டறிவதற்கு, ஒரு தனிக்குழுவை வைத்து கடுமையாக உழைப்பார்கள்.
சிறந்த இளம் வீரர்களை கண்டறிவதோடு, அவர்களை சிறந்த அனுபவ வீரர்களுடன் கலக்க விட்டு, இளமை மற்றும் அனுபவம் கொண்ட அணியை உருவாக்கி வெற்றி பெறுவார்கள்.
இப்படி இந்த இரண்டு அணிகளும் இருவேறு விதத்தில் மிக வெற்றிகரமாக ஐபிஎல் தொடரில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் கடந்த ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியால் கழட்டி விடப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்று இருந்தார்.
அப்பொழுது சிஎஸ்கே அணியை வைத்து மும்பை பற்றி நேர்மாறான ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார்.
அப்பொழுது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி ஹர்திக் பாண்டியா பேசிய பொழுது “வெற்றி பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று சிறந்த வீரர்களை வாங்கி வெற்றி பெறுவது.
இது மும்பை இந்தியன்ஸ் வழி. இன்னொன்று எந்த வீரர்களை வாங்கினாலும் அவர்களை சிறந்தவர்களாக உருவாக்குவது. இந்த வழியை சிஎஸ்கே பின்பற்றுகிறது.
நான் சிறந்த வீரர்களை கொண்டு வருவதற்கு பதிலாக, சிறந்த வீரர்களை உருவாக்குவதற்கான உத்வேகத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாட்டில் இருந்து பெற்று இருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
இவரின் கருத்துக்கு அப்பொழுதே எதிர்ப்புகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக ஆக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் இந்த பழைய கருத்தை எடுத்து வைத்து சமூக வலைதளத்தில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் வைரல் செய்து வருகிறார்கள்.