நல்லதண்ணி ஹமில்டன் வனப்பகுதியில் தீ; 30 ஏக்கர் தீக்கிரை!
பரவி வந்த தீயைக் கட்டுப்படுத்த லக்ஷபான இராணுவத்தினர், வன பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி பொலிஸ் அதிகாரிகள் முயன்ற போதிலும், மலையின் உச்சியில் பரவிய தீயைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்துள்ளது.

நல்லதண்ணி, ஹமில்டன் பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட 30 ஏக்கர் நிலம் எரிந்து தீக்கிரையாகியுள்ளதாகவும் தீ தற்போது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் வனப்பகுதி காப்பாளர் வி.ஜே.ருக்ஷன் தெரிவித்தார்.
ஹமில்டன் பகுதியில் 23ஆம் திகதி மதியம் ஏற்பட்ட தீ, அப்பகுதியில் நிலவிய மிகவும் வெயில் வானிலை காரணமாக, வனப்பகுதி முழுவதும் வேகமாகப் பரவியது.
பரவி வந்த தீயைக் கட்டுப்படுத்த லக்ஷபான இராணுவத்தினர், வன பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி பொலிஸ் அதிகாரிகள் முயன்ற போதிலும், மலையின் உச்சியில் பரவிய தீயைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்துள்ளது.
இருப்பினும், நோர்வூட் பிரதேச செயலாளர் சமிரா கம்லத்தின் தலையீட்டால், இலங்கை விமானப்படை பெல் 412 ஹெலிகொப்டரின் உதவியுடன் மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு, 11 முறை தண்ணீர் தெளித்த பின்னர் தீ கட்டுப்படுத்தப்பட்டதாக மேற்படி வனப்பகுதி காப்பாளர் மேலும் தெரிவித்தார்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் கடுமையான வெயில் வானிலை காரணமாக, வனப்பகுதிகளுக்கு தீ வைக்கும் நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால், தனது அலுவலகத்திற்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ பொதுமக்களைத் தெரிவிக்குமாறு, வி.ஜே. ருக்ஷன் கேட்டுக்கொண்டுள்ளார்.
(க.கிஷாந்தன்)