பிரபல குணச்சத்திர நடிகர் அருள்மணி காலமானார்
அழகி, தென்றல் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் அருள்மணி மாரடைப்பால் காலமானார்.

தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருள்மணி. இயக்குநர் பயிற்சி பள்ளியிலும் பணியாற்றி வந்த இவர், நடிப்பு மட்டுமில்லாமல் அரசியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
தற்போது நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தனது பேச்சின் மூலமாக மக்களிடத்தில் கட்சியின் கொள்கைகளை கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக இருந்தார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை தேர்தல் பிரசார களத்திற்கு இடையில் ஓய்வு எடுத்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரவு அருள்மணியின் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தியால் அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.