பம்பலப்பிட்டியில் போலி கல்வி நிலையம் சுற்றிவளைப்பு; யுவதி கைது!
போலி கல்வி நிறுவனங்கள் தொடர்பில் மாணவர்களும் பெற்றோர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவ்வாறு ஏதேனும் தகவல்கள் இருப்பின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பம்பலப்பிட்டி Lauries வீதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிய கல்வி நிறுவனமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் எனக் கூறப்படும் 24 வயது யுவதியை கைது செய்துள்ளனர்.
யுவதி, கிரியுல்ல - நாரங்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கல்வி நிறுவனம், நாடு முழுவதிலும் உள்ள மாணவர்களை உள்வாங்குவதற்கும், ஆன்லைன் கருத்தரங்குகளை நடத்துவதற்கும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு தேவையான டிப்ளோமாக்கள் மற்றும் உயர் டிப்ளோமாக்கள் போன்ற கல்வித் தகுதிகளை வழங்குவதாக சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்துள்ளது.
எந்தவொரு சட்ட அங்கிகாரமும் இன்றி கல்விச் சேவைகளை வழங்கிய பின்னர், போலியான டிப்ளோமா சான்றிதழ்களையும் நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்த கல்வி மோசடி தொடர்பாக இதுவரை பொலிஸாருக்கு 43 முறைப்பாடுகள் வந்துள்ளன.
அந்நிறுவனம், மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அனுமதியையும் பெறவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1,000 நபர்கள் இந்த மோசடிக்கு பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது.
குறித்த நிறுவனத்தின் இணைப் பணிப்பாளராக செயற்பட்டு, தற்போது தலைமறைவாகவுள்ள மட்டக்குளியைச் சேர்ந்த 25 வயது நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இவ்வாறான போலி கல்வி நிறுவனங்கள் தொடர்பில் மாணவர்களும் பெற்றோர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவ்வாறு ஏதேனும் தகவல்கள் இருப்பின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.