மதிப்பாய்வின் முக்கியத்துவம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வு
நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் சரியான முறையில் முன்மொழியப்பட்டு, திட்டமிடப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா, அதன் இலக்குகள் அடையப்பட்டனவா என்பனவற்றை ஆரம்பத்தில் இருந்தே கண்காணிப்பது மிகவும் அவசியமாகின்றது.

மதிப்பாய்வின் முக்கியத்துவத்தை ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இன்று புதன்கிழமை (07) முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை மதிப்பாய்வுச் சங்கம் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஆகிய இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
இதன் வளவாளர்களாக இலங்கை மதிப்பாய்வுச் சங்கத்தின் மதிப்பாய்வுத்துறை விரிவுரையாளர் வைதேகி அனுஷ்யந்தன் மற்றும் மதிப்பாய்வுத் திட்ட முகாமையாளர் மயில்வாகனம் திலகராஜா ஆகியோர் கலந்துகொண்டு, மதிப்பாய்வு குறித்த விளக்கங்களை வழங்கினர்.
நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் சரியான முறையில் முன்மொழியப்பட்டு, திட்டமிடப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா, அதன் இலக்குகள் அடையப்பட்டனவா என்பனவற்றை ஆரம்பத்தில் இருந்தே கண்காணிப்பது மிகவும் அவசியமாகின்றது.
நிகழ்ச்சிகள், திட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பிலான மதிப்பாய்வுகளை முன்னெடுக்கலாம்.
செலவுகள், நேரம், அளவு, தரம் மற்றும் பேறுபேறு என்பன மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. அவ்வாறு மதிப்பாய்வு செய்யப்படும் போது, அதில் பின்னடைவுகள் காணப்படும் பட்சத்தில் திட்டவரைபை முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கு அது குறித்து அறிவிக்க முடியும்.
தவிர, குறித்த பின்னடைவுக்கான காரணங்களையும் இனங்காணுதல் அவசியமாகின்றது.
இவை அனைத்தும் சரியாக நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் நாட்டு மக்களுக்கு எது தேவையே அவற்றை சரியான முறையில் வழங்குவதுடன், ஒரு நாட்டின் அபிவிருத்தியை வீணடிக்காமலும் இருக்க முடியும் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது வளவாளர்கள் தெளிபடுத்தினர்.
மேலும், நம்நாட்டின் வளமான முன்னேற்றத்திற்கு மதிப்பாய்வு அவசியம் எனத் தெரிவித்த எம்.திலகராஜா, வரைபில் உள்ள மதிப்பாய்வை சட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இன்று காலை 09 மணி முதல் பிற்பகல் 01 மணி வரை நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டனர்.