20 வயது இளம் கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
2022ஆம் ஆண்டில் நடந்த கவுண்டி டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்சுக்கு எதிராக பந்துவீசிய ஜோஸ் பாகர், ஒரே ஓவரில் 34 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

இங்கிலாந்தில் முதல் தர போட்டிகளில் விளையாடி வந்த 20 வயது இளம் சுழற்பந்து வீச்சாளர் திடீரென மரணமடைந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் தற்போது கவுண்டி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், வார்செஸ்டர்ஷிர் கவுனிடி அணிக்காக ஜோஸ் பாகர் என்ற 20 வயதே ஆன இளம் சுழற்பந்து வீச்சாளர் விளையாடி வந்தார்.
இதில், நேற்று நடைபெற்ற தொர்ஹாம் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அவர், 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில், இன்று அதிகாலையில் அவர் தூக்கத்திலேயே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. பாகருக்கு என்ன நடந்தது என்ற தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட மறுத்துவிட்ட நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், பாகர் மரணம் குறித்து தற்போது எதுவும் கேட்க வேண்டாம் என வார்செஸ்டர்ஷிர் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பாகரின் குடும்பத்தின் உணர்வுகளை மதித்து, அனைவரும் நடந்து கொள்வோம் என்றும் கூறியுள்ளது.
22 முதல் தரப் போட்டிகளில் 2 அரை சதங்கள் உள்பட 411 ரன்களை எடுத்துள்ள ஜோஸ் பாகர், 43 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
அதேபோல், ஏ தரப் போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்து அணிக்காக, மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக உருவெடுத்து வந்த ஜோஸ் பாகர், 2021ஆம் ஆண்டில் வார்செஸ்டர்ஷிர் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
2022ஆம் ஆண்டில் நடந்த கவுண்டி டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்சுக்கு எதிராக பந்துவீசிய ஜோஸ் பாகர், ஒரே ஓவரில் 34 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
இது அப்போது பெரும் பேசுபொருளாக இருந்தது. அப்போது, பாகர் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிய பென் ஸ்டோக்ஸ், ”கவலைப்பட வேண்டாம் பாகர், பேட்டர்களுக்கு பிட்ச் சாதகமாக இருந்ததால், அதிக ரன்களை அடிக்க முடிந்ததாகவும், உங்களது பந்துவீச்சு அபாரமாக இருந்தது” என தெரிவித்திருந்தார்.
அதன்பிறகு சிறப்பாக செயல்பட்டு வந்த ஜோஸ் பாகர், திடீரென மரணமடைந்தது குடும்பத்தினரை மட்டுமின்றி, அணியினரையும் நிலைகுலைய வைத்துள்ளது.