தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தக விவகாரம்: தவறான புரிதலை ஏற்படுத்த வேண்டாம் – ஹரிணி
இந்த விவகாரத்தில் யார் தவறிழைத்தனர், அந்த தவறின் பின்னணி, நோக்கம் என்ன என்பவை தொடர்பான உண்மைகள் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய விடயத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய கல்வி மறுசீரமைப்புத் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாடு உருவாகக் கூடாது என கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
புதிய கல்வி மறுசீரமைப்பு குறித்து இன்று புதன்கிழமை (07) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது உரையாற்றிய அவர், தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு நேற்று (06) அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அந்த விடயம் பாடப்புத்தகத்தில் எவ்வாறு சேர்க்கப்பட்டது என்பது தொடர்பாக முறையான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். இந்த விவகாரத்தில் யார் தவறிழைத்தனர், அந்த தவறின் பின்னணி, நோக்கம் என்ன என்பவை தொடர்பான உண்மைகள் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார். இச்சம்பவத்தை மறைக்க அரசாங்கத்திற்கு எந்தவித அவசியமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய கல்வி நிறுவனம், தனிச்சட்டத்தின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனம் என்பதாலும், கல்வி அமைச்சு நேரடியாக அதில் தலையிட முடியாத சூழல் இருப்பதாலும், அதன் ஆணைக்குழு ஊடாக இந்த விடயம் விரிவாக ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கினார்.
மேலும், குறித்த பாடப்புத்தகங்கள் இதுவரை பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்ட பிரதமர், இந்தத் தனிப்பட்ட சம்பவத்தை முன்னிலைப்படுத்தி, புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான எண்ணங்கள் அல்லது அச்சங்கள் உருவாகக் கூடாது என மீண்டும் வலியுறுத்தினார்.