கெம்பியன் நகரத்தில் ஆரம்பப்பிரிவை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் 

தமது பிள்ளைகளை அதிக பணம் செலவு செய்து தூரபிரதேசத்துக்கு ஆரம்பக்கல்வியை கற்க அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் குறிப்பிட்டனர்.

மார்ச் 10, 2023 - 19:51
கெம்பியன் நகரத்தில் ஆரம்பப்பிரிவை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் 

பொகவந்தலாவை, கெம்பியன் நகரப்பகுதியில் ஆரம்பப்பிரிவு பாடசாலையை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்து, முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று(10) காலை பொகவந்தலாவை கெம்பியன் நகரத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெற்றோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, அங்கு வந்த ஒருசிலர் ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டாமென இடையூறு விளைவித்த நிலையில்,  அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

தொடர்ந்து, அங்கு கைகலப்பு இடம்பெற்ற நிலையில்,  பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

கெம்பியன் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஜந்து வரையான ஆரம்பப்பிரிவு  முன்னர் காணப்பட்டது. பின்னர், ஆயிரம் பாடசாலை வேலைத்திட்டத்திற்குள் கெம்பியன் தமிழ் மகா வித்தியாலயம் உள்வாங்கப்பட்டதன் பின்னர் ஆரம்பப்பிரிவு இடைநிறுத்தப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, தமது பிள்ளைகளை அதிக பணம் செலவு செய்து தூரபிரதேசத்துக்கு ஆரம்பக்கல்வியை கற்க அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் குறிப்பிட்டனர்.

இதேவேளை, கெம்பியன் நகரப்பகுதியில் ஆரம்பபரிவு பாடசாலைக்கான மற்றுமொரு கட்டடம்  பாழடைந்த நிலையில் உள்ளதால் இதனை புணரமைப்பு செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில், மத்திய மாகாண ஆளுனர் மற்றும் ஹட்டன் வலயகல்வி பணிமனைக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ள போதிலும்  எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, வெகுவிரைவில் குறித்த கட்டிடத்தினை புணரமைத்து அல்லது புதிய கட்டடமொன்றை வழங்குமாறு இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!