இலங்கையில் நாளாந்தம் எரிபொருள் விலை திருத்தம் : வெளியான அறிவிப்பு
2024 ஆம் ஆண்டு முதல் தினசரி எரிபொருள் விலை திருத்த முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டு முதல் தினசரி எரிபொருள் விலை திருத்த முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், எரிபொருள் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட ஏனைய சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், எரிபொருள் விநியோகம் மற்றும் புதிய எரிபொருள் நிலையங்களின் எதிர்கால அபிவிருத்தி குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தானியங்கி கணினி மயமாக்கப்பட்ட இயக்க முறையில் நடைமுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தினசரி தானியங்கி எரிபொருள் விலை திருத்த முறையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தானியங்கி உபகரணங்களை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்தும் அமைச்சர் இதன்போது அறிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றைய தினமும் 90 அமெரிக்க டொலரைக் கடந்துள்ளது. கடந்த 7ஆம் திகதி 89 அமெரிக்க டொலராக இருந்த ஒரு பீப்பாய் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் தற்போது 92 டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் எரிபொருள் விநியோக குறைப்பை இந்த வருட இறுதி வரை நீடிக்கவுள்ளதாக அறிவித்ததை அடுத்து எரிபொருள் விலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இலங்கையிலும் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.