பங்களாதேஷ் - இலங்கை போட்டி ரத்தாகுமா? வெளியே வராத வீரர்கள்.. எழுந்துள்ள சந்தேகம்!
பங்களாதேஷ் மற்றும் இலங்கை வீரர்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். பங்களாதேஷ் - இலங்கை உலகக்கோப்பை போட்டி திங்கள் அன்று நடைபெற வேண்டும்.

பங்களாதேஷ் - இலங்கை இடையே நடக்க உள்ள உலகக்கோப்பை லீக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த போட்டி டெல்லியில் நடைபெற உள்ளது. டெல்லியில் தற்போது உச்சகட்ட காற்று மாசு ஏற்பட்டு உள்ளது. காற்று தர அளவீட்டின் படி 400 புள்ளிகளை தாண்டி இருக்கிறது காற்று மாசு.
400 புள்ளிகளை தாண்டினால் அவசரநிலை அறிவிக்க வேண்டும். டெல்லி அரசு சில நாட்கள் முன்பு அவசரநிலை அறிவித்து பள்ளிகளுக்கு மட்டும் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்து இருந்தது.
இந்த மோசமான நிலையால், பங்களாதேஷ் மற்றும் இலங்கை வீரர்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். பங்களாதேஷ் - இலங்கை உலகக்கோப்பை போட்டி திங்கள் அன்று நடைபெற வேண்டும்.
அதற்கு முன் மூன்று நாட்களுக்கு இரு அணிகளும் அங்கே தங்கி பயிற்சி செய்ய திட்டமிட்ட நிலையில், இலங்கை அணி இரண்டு நாட்களும் பயிற்சி செய்ய வெளியே வரவில்லை. அந்த அணியின் மருத்துவர்கள், அவர்களை பயிற்சி செய்ய வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கின்றனர்.
பங்களாதேஷ் முதல் நாள் அன்று தங்கள் வீரர்கள் பலருக்கு காற்று மாசு காரணமாக இருமல் ஏற்பட்டதால் பயிற்சி செய்யவில்லை. எனினும், சனிக்கிழமை அன்று சிறிது நேரம் பயிற்சி செய்தனர் வங்கதேச வீரர்கள்.
இந்த நிலையில், இரண்டு அணி வீரர்களும் ஐசிசியிடம் டெல்லியில் ஆடுவது கடினம் என்பதை சுட்டிக் காட்டி இருக்கின்றனர். ஐசிசி போட்டியை காற்று மாசுக்கு நடுவே பாதுகாப்பாக நடத்துவது குறித்து மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்தை கேட்டு வருவதாக கூறி இருக்கிறது.
மறுபுறம் உலகக்கோப்பை தொடரை நடத்தும் பிசிசிஐ காற்று மாசை அளக்கும் கருவியை கொண்டு மைதானத்தில் தொடர்ந்து பரிசோதனை செய்து வருகிறது.
தற்போது அவசர திட்டமாக, போட்டிக்கு முன் மற்றும் இடைவேளைகளில் தண்ணீரை ட்ரோன் உதவியுடன் மைதானம் முழுவதும் தெளித்து காற்று மாசு அளவை குறைக்க முடியுமா? என ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
எந்த திட்டமும் வேலை செய்யவில்லை எனும் பட்சத்தில், பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணி போட்டியில் ஆட முடியாது என எதிர்ப்பு தெரிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.
அப்படி நடந்தால் போட்டியை வேறு ஒரு மைதானத்துக்கு மாற்ற வேண்டும். விற்ற டிக்கெட்களுக்கான பணத்தை திரும்ப அளிக்க வேண்டும். இன்னும் பல சிக்கல்கள் எழும். அதனால் பிசிசிஐ இக்கட்டான நிலையில் உள்ளது.