இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்காக மருத்துவமனையை தேடி ஓடும் ரசிகர்கள்... காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு முன் ஆஷஸ் தொடரெல்லாம் சாதாரணம் என்று கூறியிருந்தார்.

அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு முன் ஆஷஸ் தொடரெல்லாம் சாதாரணம் என்று கூறியிருந்தார்.
சர்வதேச வீரருக்கே இப்படியென்றால் ரசிகர்களுக்கு சொல்லவா வேண்டும். இந்திய ரசிகர்கள் பலருக்கும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை நேரில் காண வேண்டும் என்று விருப்பத்தோடு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் அக்டோபர் 15ஆம் தேதி நடக்கவுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடக்கவுள்ளது.
சுமார் 1.3 லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் ஆட்டம் நடக்கவுள்ளதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ரசிகர்கள் பலரும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை நேரில் காண ஆவலுடன் இருக்கிறார்கள். அதேபோல் டிக்கெட் விற்பனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
டிக்கெட் விற்பனை மட்டுமல்லாமல், அகமதாபாத்தில் உள்ள ஹோட்டலில் அறைகளை புக் செய்வதும் தீவிரமாக இருக்கின்றனர்.
இதனையறிந்த அகமதாபாத் ஹோட்டல் நிர்வாகிகள், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறும் சில நாட்களுக்கு முன்பிருந்தே ஹோட்டல் அறைகளின் வாடகை ஒருநாளுக்கு ரூ.50 ஆயிரமாக நிர்ணயித்துவிட்டனர்.
இதனால் ரசிகர்கள் பலரும் டிக்கெட் விலையுடன் தங்குவதற்கான செலவு அதிகமிருப்பதாக கருதி வந்தனர்.
இந்த நிலையில் ரசிகர்கள் இந்தியா - பாகிஸ்தான் போட்டியன்று அகமதாபாத்தில் தங்குவதற்கு வேறு புதிய வழிகளை ஆராய்ந்து வந்தனர். இந்த நிலையில் திடீரென இந்தியா - பாகிஸ்தான் போட்டியன்று தங்குவதற்காக மருத்துவமனைகளை நாட தொடங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
அக்.15ஆம் தேதியை ஒட்டி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்ய ஏராளமானோர் விசாரிக்க தொடங்கியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக தங்கும் நபருடன் மற்றொருவர் அனுமதிக்கப்படுவார். அதேபோல் அவர்களுக்கான உணவும் மருத்துவமனையிலேயே வழங்கப்படும்.
ஹோட்டல் அறைகளில் தங்கும் செலவை ஒப்பிட்டால், மருத்துவமனையில் செலவு மிகவும் குறைவாக இருப்பதோடு, மருத்துவ பரிசோதனையை முடித்துவிடலாம் என்று ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் பேசுகையில், அக்.15ஆம் தேதியை கணக்கிட்டு முழு உடல் பரிசோதனை விவரங்கள் பற்றி ஏராளமானோர் விசாரித்து வருகிறார்கள்.
எங்கள் மருத்துவமனை மட்டுமல்லாமல், அகமதாபாத்தின் அத்தனை மருத்துவமனைகளிலும் இதுதான் நிலைமை. அதனால் நாங்கள் புதிய உடல் பரிசோதனை பேக்கேஜ் பற்றி சிந்தித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.