இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையை விரிவுபடுத்தும் சீனா
இந்த நான்கு நாட்கள் மாநாட்டின் கருப்பொருள் "டிஜிட்டலைசேஷன் வளர்ச்சியை வழிநடத்துகிறது, நுண்ணறிவு எதிர்காலத்தை வழிநடத்துகிறது" என்பதாகும்.

நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு சீனச் சந்தையைத் திறப்பதில் சீனாவின் கவனம் குவிந்துள்ளது.
சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான உலகளாவிய டிஜிட்டல் பொருளாதார உச்சி மாநாட்டில் இலங்கை உச்சிமாநாட்டின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய கருத்துகளைக் கருத்தில் கொண்டே இந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தகவல் தொழிநுட்பத் துறையில் இலங்கையின் முன்னேற்றம் குறித்து சீனப் பிரதிநிதிகள் தங்களது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்த நான்கு நாட்கள் மாநாட்டின் கருப்பொருள் "டிஜிட்டலைசேஷன் வளர்ச்சியை வழிநடத்துகிறது, நுண்ணறிவு எதிர்காலத்தை வழிநடத்துகிறது" என்பதாகும்.
இந்த மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் பெரேரா மற்றும் பிரதி பிரதான டிஜிட்டல் பொருளாதார அதிகாரி சசீந்திர சமரரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் உரையாற்றிய மகேஷ் பெரேரா, டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் 2030ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் உத்திகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்துக் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்த வேளையில் கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய எரிபொருள் உரிமம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளித்ததுடன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பலன்களை மக்கள் பெற்ற வாய்ப்புகளில் இதுவும் ஒன்று என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மாநாடு இலங்கையில் டிஜிட்டல் நிதித்துறையை மேம்படுத்துவதற்கும் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் ஒரு தூண்டுதலாக இருந்ததுடன், மேலும் இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறை சீன சந்தையில் நுழைவதன் முக்கியத்துவம் குறித்து இங்கு வலியுறுத்தப்பட்டது.
உலகின் நகரங்களில் கவனம் செலுத்தி டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்துவது, புதுமையான தொழில்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது, 5G தொழில்நுட்பம் போன்ற வேகமாக வளரும் டிஜிட்டல் துறைகளில் அதிக கவனம் செலுத்துவது ஆகியவை நேர்மறையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பான ஒக்டோபர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள டிஜிட்டல் முதலீட்டு மாநாட்டில் பங்குபற்றுவதற்கான அழைப்புக்கு சீன மாநாட்டுப் பிரதிநிதிகளும் நல்ல முறையில் பதிலளித்துள்ளமை குறிப்பிட்ட தக்கது.
சீனா, இலங்கை, ஹாங்காங், மலேசியா, நோர்வே, லாவோஸ், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஸ்லோவேனியா போன்ற பல நாடுகளின் பிரதிநிதிகள், ஆராய்ச்சி, கல்வி, தொழில் மற்றும் அரசியல் எனப் பல துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.