செம்மணி மனிதப் புதைகுழி: அகழ்வாய்வுக்கு 18 மில்லியன் ரூபாய் நிதி தாமதம் - 240 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனிதப் புதைகுழி: அகழ்வாய்வுக்கு 18 மில்லியன் ரூபாய் நிதி தாமதம் - 240 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

ஒக்டோபர் 7, 2025 - 13:44
செம்மணி மனிதப் புதைகுழி: அகழ்வாய்வுக்கு 18 மில்லியன் ரூபாய் நிதி தாமதம் - 240 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
செம்மணி மனிதப் புதைகுழி

இலங்கையில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியை இன்னும் இரண்டு மாதங்களுக்கு அகழ்வாய்வு செய்வதற்கு கோரப்பட்ட நிதி இரண்டு கோடி ரூபாயை அண்மித்த தொகை என்பது தெரியவந்துள்ளது.

எட்டு வார காலத்திற்கு அகழ்வாய்வுப் பணிக்காக தயாரிக்கப்பட்ட பாதீடு யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனால் செப்டெம்பர் 18, 2025 அன்று நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அந்த தொகை சுமார் ஒரு கோடியே என்பது இலட்சம் (18 மில்லியன் ரூபாய்) எனத் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி தொடர்பான கடந்த ஒக்டோபர் 1, 2025 அன்று யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கே. சுபாகர், அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்காக கோரப்பட்ட நிதி நீதி அமைச்சினால் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

சிறுவர்கள் உள்ளிட்ட 240 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ள, மனித புதைகுழியின் அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்காக கோரப்பட்ட நிதி அங்கீகரிக்கப்படாததால் பணிகள் முடங்கியுள்ளன.

சட்ட வைத்திய அதிகாரியின் கோரிக்கை முன்வைக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர், செம்மணிப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் தடைபடாமல் இருக்க நிதியுதவியை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்திருந்தது.

"நிதி தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பாதீட்டு கோரிக்கைகளை விரைவாக செயல்படுத்தவும், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வழங்கல்களை விரைவாக செயல்படுத்தவும், காணாமல் போனோர் அலுவலகம் உட்பட செம்மணிப் புதைகுழி விசாரணையில் ஈடுபட்டுள்ள அனைத்து அரச அதிகாரிகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றவும் நீதி அமைச்சின் ஒரு மத்திய அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்," என ஆணைக்குழு ஒரு அறிக்கையில் கூறியிருந்தது. அந்த பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.

முன்னர் அங்கீகரிக்கப்பட்ட நிதியுடன் 45 நாட்கள் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வாய்வு, செப்டெம்பர் 6, 2025 அன்று பிற்பகல் நிறைவடைந்த நேரத்தில், 240 மனித எலும்புக்கூடுகளில் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்தும் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.

மனித எலும்புகளுடன், செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில் குழந்தை பால் போத்தல், பொம்மை, சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலை பைகள் ஆகியவை உள்ளடங்கும்.

பெப்ரவரி 11, 2025 அன்று மயானத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, தற்செயலாக பல மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

எலும்புத் துண்டுகளை பரிசோதிப்பதற்காக யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனுடன் வருகைத்தந்த அப்போதைய நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, அவை மனித எச்சங்களா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்க பெப்ரவரி 20 அன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், மே 15, 2025 அன்று செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பமாகின.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!