அஸ்வின், சுந்தருக்கு டீமில் இடமே இல்லை.. இதெல்லாம் சும்மா.. ஏற்கனவே போட்ட பிளான்!
2023 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் திடீரென ஸ்பின்னர்களான அஸ்வின் மற்றும் வாஷிங்க்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற பேச்சு எழுந்துள்ளது.

2023 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் திடீரென ஸ்பின்னர்களான அஸ்வின் மற்றும் வாஷிங்க்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற பேச்சு எழுந்துள்ளது.
அவர்கள் இருவரும் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ளனர். அதன் காரணமாகவே, அவர்கள் உலகக்கோப்பை அணியிலும் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், இது எதுவுமே நடக்கப் போவதில்லை.
முன்னதாக, இந்திய அணியில் மூன்று ஸ்பின்னர்கள் இடம் பெற்று இருந்தனர். அந்த மூவர் அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ். அவர்களில் அக்சர் பட்டேலுக்கு ஆசிய கோப்பை தொடரில் காயம் ஏற்பட்டது. அவர் ஆஃப் ஸ்பின்னர் மற்றும் பகுதி நேர பேட்ஸ்மேன் என்பதால் அவருக்கு மாற்று வீரரை தேடியது இந்திய அணி.
அப்படித் தான் பல ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஆடாத அஸ்வின் மற்றும் வாஷிங்க்டன் சுந்தருக்கு ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
பிட்ச் நிலவரம் : இந்த நிலையில், உலகக்கோப்பை அணியில் அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் இடம் பெறுவார்கள் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை என்கிறார்கள் உலகக்கோப்பை தொடரின் பிட்ச் நிலவரம் குறித்து அறிந்தவர்கள்.
இந்தியாவில் நடந்தாலும் இந்த உலகக்கோப்பை தொடரில் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாகத் தான் இருக்கப் போகிறது. அதனால், இந்திய அணி நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தவே திட்டமிடும்.
மேலும், இரவு நேரங்களில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் ஸ்பின் பந்து வீசுவது கடினம். அதனால், இந்திய அணி எப்படிப் பார்த்தாலும் இரண்டு ஸ்பின்னர் வரை தான் ஒரு போட்டியில் பயன்படுத்த முடியும்.
அந்த இரண்டு ஸ்பின்னர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தான். குல்தீப் யாதவ் தன் சுழலால் கடந்த சில போட்டிகளில் தனி ஆளாக வெற்றியை பெற்றுத் தந்து இருக்கிறார். ஜடேஜா தற்போது பேட்டிங் ஃபார்மில் சுமாராக இருந்தாலும், அவர் அனுபவம் மற்றும் பீல்டிங் திறனால் அணியில் நிச்சயம் இடம் பெறுவார்.
ஒருவேளை அக்சர் பட்டேல் காயம் குணமடைந்து அணியில் தொடர்ந்தாலும் அவருக்கு அனைத்து போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காது. ஜடேஜா அல்லது குல்தீப் காயத்தால் ஆட முடியாமல் போனால் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த நிலையில், அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் உலகக்கோப்பை தொடரில் ஆடப் போகிறார்கள் என்று சொல்வதெல்லாம் நடக்காத காரியம்.
இதை எல்லாம் கணித்தே தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் அணித் தேர்வை நடத்தி இருக்கிறார். அக்சர் பட்டேல் கூட மாற்று வீரர் தான். அந்த மாற்று வீரருக்கு தான் இப்போது மாற்று வீரர்களாக அஸ்வின், குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்படுகிறார்கள்.