மழையால் பாதித்த போட்டி - ஆஸியை கலங்கவைத்த இங்கிலாந்து!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  

ஜுலை 9, 2023 - 15:22
மழையால் பாதித்த போட்டி - ஆஸியை கலங்கவைத்த இங்கிலாந்து!
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  

இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. 
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்றுவருகிறது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 

இதில் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 237 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதையடுத்து 26 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் மீண்டும் ஸ்டூவர்ட் பிராட் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜா - மார்னஸ் லபுஷாக்னே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். 

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட உஸ்மான் கவாஜா 43 ரன்களிலும், மார்னஸ் லபுஷாக்னே 33 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். 

இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும் 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் மொயீன் அலி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையை கட்டினார். 

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை எடுத்தது. இதையடுத்து இன்று நடைபெற இருந்த மூன்றாம் நாள் ஆட்டத்தின் முதலிரண்டு செஷன்கள் தொடர் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. 

அதன்பின் தொடங்கிய மூன்றாவது செஷனில் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்டிரேலிய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் மார்ஷ் 28 ரன்களிலும், அலெக்ஸ் கேரி 5 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த டிராவிஸ் ஹெட்டும் 77 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

இதனால் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழது 224 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. 

இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 251 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதன்மூலம் இங்கிலாந்து அணி மூன்றாம் நால் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்களைச் சேர்த்துள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!