தொடரும் கொலைகளால் அதிர்கிறது தென்னிலங்கை

டிசம்பர் 21, 2022 - 15:57
தொடரும் கொலைகளால் அதிர்கிறது தென்னிலங்கை

கைகள், வாய் கட்டப்பட்ட நிலையில் மற்றுமொரு கொலை


இங்கிரிய, இரத்தினபுரி வீதியில் நம்பபான, கடகரெல்ல பாலத்திற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் கைகள் மற்றும் வாயைக் கட்டியவாறு கொலைசெய்யப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் மினுவாங்கொடையைச் சேர்ந்த அசோக பண்டார என்று அவரது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
 
மினுவாங்கொடை கல்லொலுவ குறுக்கு வீதியில் வசிக்கும் இவர் வாடகை வண்டி சாரதியாக பணிபுரியும் ஒரு பிள்ளையின் தந்தையாவார். 

சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு அருகில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் சடலம் தொடர்பில் இங்கிரிய பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, உயிரிழந்தவரின் கைகள் பெல்ட் மற்றும் வெள்ளைத் துணியால் பின்னால் கட்டப்பட்டிருந்ததாகவும், வாய் வெள்ளைத் துணியால் கட்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கண்டுபிடிக்கப்படும் போது உள்ளாடை மாத்திரமே அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டவரின் மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும், குடும்ப தகராறு காரணமாக அவர் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட நபர் தனது சொகுசு காரை இரண்டு டாக்சி நிறுவனங்களில் பதிவு செய்து, வாடகை பணத்தில் வாழ்க்கையை நடத்தி வந்ததாகவும், அவ்வப்போது வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒருவாரத்தில் பிரபல தமிழ் வர்த்தகர் , மற்றுமொரு வர்த்தகர் உட்பட மூவர் தென்பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!