நடிகர் விஜய் கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார்

நிகழ்வில் உரையாற்றிய நடிகர் விஜய், விரைவில் மாநாட்டுக்கான திகதி அறிவிக்கப்படும். நம்பிக்கையாக இருங்க, நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” என்றார். 

ஆகஸ்ட் 22, 2024 - 15:42
நடிகர் விஜய் கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார்

தென்னிந்திய பிரபல நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை, பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று வியாழைக்கிழமை (22) அறிமுகம் செய்தார். 

அதனைத் தொடர்ந்து 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை நடிகர் விஜய் ஏற்றினார்.

கட்சி கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சம் நிறமும் உள்ளது. கொடியின் நடுவில் வாகை மலர் இருக்க அதன் இருபுறமும் யானை உள்ளது.

இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. கவிஞர் விவேக் எழுதி, தமன் இசையமைத்து இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விழாவின் தொடக்கத்தில் விஜய் உறுதிமொழி வாசிக்க, கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய நடிகர் விஜய்,

“அரசியல் பயணத்தை தொடங்கி பெப்ரவரி மாதம் கட்சியை அறிவித்தேன். அப்போதில் இருந்து இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்.

“த.வெ.க கட்சியின் கொடியை கொடியாக மட்டும் நான் பார்க்கவில்லை, தமிழ் நாட்டின் வருங்கால எதிர்காலமாகவே பார்க்கிறேன். தமிழக மக்களின் வெற்றிக்கான ஒரு கொடியாக த.வெ.க கொடி அமையும்.

“ த.வெ.க மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மாநாட்டுக்கான திகதி அறிவிக்கப்படும்.

“ஓர் அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம். என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் இணைந்து உழைப்போம். நம்பிக்கையாக இருங்க, நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” என்றார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!