தேர்தலுக்கான கட்டுப்பணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை
தேர்தல்களின் போது வேட்பாளர்களினால் செலுத்தப்படும் கட்டுப்பணத்துக்கான தொகையை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேர்தல்களின் போது வேட்பாளர்களினால் செலுத்தப்படும் கட்டுப்பணத்துக்கான தொகையை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார பின்னடைவுக்கு பொருத்தமான வகையில் கட்டுப்பணத் தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி, அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச ஆகியோர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கிணங்க 1981ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினுடைய வேட்பாளர் ஒருவரின் கட்டுப்பணம் ரூபாய் 2.6 மில்லியன்வரை அதிகரிக்கப்படும்.
சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் கட்டுப்பணத் தொகை 3.1 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் சட்டத்துக்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் ஒருவரின் கட்டுப்பணத் தொகை 11,000 ரூபாயாகவும் சுயேட்சை குழு வேட்பாளர் ஒருவரின் கட்டுப்பணம் 16,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்துக்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் ஒருவரின் கட்டுப்பணம் 6,000 ரூபாயாகவும் சுயேட்சை குழு வேட்பாளர் ஒருவரின் கட்டுப்பணத் தொகை 11,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.