புதிய மோட்டார் சைக்கிள் சங்கிலி சுத்தம் செய்யும்போது அதிகரிக்கும் விபத்துகள் – சுகாதாரத்துறை எச்சரிக்கை
சிலர் இன்ஜினை முதலாம் கியரில் இயக்கியவாறே, எந்தவித பாதுகாப்பும் இன்றி வெறும் கையால் சங்கிலியைத் துடைக்க முயற்சிப்பதாக அவர் விளக்கினார்.
புதிதாகக் கொள்வனவு செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் சங்கிலிகளை பாதுகாப்பற்ற முறையில் சுத்தம் செய்ய முயற்சிக்கும் போது ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாகச் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் மற்றும் சத்திரசிகிச்சை பிரிவின் வைத்தியர் கனிந்து மாதவ இதனைத் தெரிவித்தார். 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே இவ்வகை விபத்துகளுக்கு அதிகமாக முகங்கொடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு மாதங்களுக்குள், இவ்வயதுக்குட்பட்ட பல இளைஞர்கள் தங்களின் பழக்கப்பட்ட கையின் விரல் நுனிகளில் கடுமையான காயங்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அடிக்கடி வருவதை அவதானித்ததாக வைத்தியர் தெரிவித்தார். மேலதிக ஆய்வுகளின் போது, இந்தக் காயங்களுக்கு ஒரே மாதிரியான காரணம் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அதாவது, பாதிக்கப்பட்ட அனைவரும் தமது புதிய மோட்டார் சைக்கிள்களின் சங்கிலிகளை சுத்தம் செய்ய முயன்ற வேளையிலேயே இந்த விபத்துகள் நிகழ்ந்துள்ளன. மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள் சங்கிலிகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தினாலும், சிலர் இன்ஜினை முதலாம் கியரில் இயக்கியவாறே, எந்தவித பாதுகாப்பும் இன்றி வெறும் கையால் சங்கிலியைத் துடைக்க முயற்சிப்பதாக அவர் விளக்கினார்.
பெரும்பாலும் பருத்தித் துணியை பயன்படுத்தி சங்கிலியைச் சுத்தம் செய்யும் போது, அந்தத் துணி சங்கிலியில் சிக்கிக்கொள்வதுடன், கையும் அதனுடன் உள்ளிழுக்கப்பட்டு கடுமையான காயங்கள் ஏற்படுகின்றன. இதில் அதிகம் பாதிக்கப்படுவது, ஒருவரின் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் கையின் முதல் மூன்று விரல்களாகும்.
சில சந்தர்ப்பங்களில் அந்த விரல்களை மீண்டும் பொருத்துவதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும், அவற்றை பழைய நிலைக்கு கொண்டுவர முடியாத நிலை காணப்படுவதாக வைத்தியர் கவலை தெரிவித்தார். எனவே, மோட்டார் சைக்கிள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போது இளைஞர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், பாதுகாப்பான கையுறைகளை கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.