பாம்பு தீண்டி ஆறு மாத குழந்தை மரணம்
வீட்டின் அருகில் இருந்த காடுகளுக்குள் இருந்தே பாம்பு வீட்டுக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பாம்பு தீண்டியதில் ஆறு மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் பற்றிமாபுரம் பிரதேசத்தில் இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது வீட்டில் வெற்றுத்தரையில் தூங்கிக்கொண்டிருந்த ஆறு மாத குழந்தையை பாம்பு பல இடங்களில் தீண்டியுள்ளதால் மரணம் ஏற்பட்டுள்ளதாக, திடீர் மரண விசாரணை அதிகாரியின் பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
தாயின் அருகே தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அதிகாலை 3.30 மணி அளவில் பாம்பு தீண்டி உள்ள நிலையில், காலை 7 மணி அளவில் மயக்க நிலையில் இருந்த குழந்தையை ஆரையம்பதி வைத்தியசாலையில் தாய் அனுமதித்துள்ளார்.
குழந்தை உயிரிழந்த நிலையிலேயே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் குழந்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இக்னேஷ் அபிலாஷ் என்னும் 6 மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. வீட்டின் அருகில் இருந்த காடுகளுக்குள் இருந்தே பாம்பு வீட்டுக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகின்றது.