ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என கோரி போராட்டம்
இலங்கை கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்களால் 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மீட்கப்பட்டு முல்லைத்தீவு கேப்பாபுலவுவில் உள்ள இலங்கை விமானப்படைத் தளத்தின் வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை முகாமில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்த வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வியாழக்கிழமையன்று கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழு, மனித உரிமைப் பாதுகாவலர்கள், சிவில் சமூகங்களின் உறுப்பினர்கள், உள்ளூர் பெண்கள் அமைப்புகள் மற்றும் மீனவர்கள் ஆகியோரால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, அங்கு கருத்து வெளியிட்ட வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் யார்ட்சன், ரோஹிங்கியா அகதிகளை இராணுவமயமாக்கப்பட்ட சூழலில் வைத்திருப்பது உலகளவில் நடைமுறையில் உள்ள சர்வதேச மனிதாபிமான விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறினார்.
அத்துடன், அரசாங்கம் விரைந்து செயற்பட்டு ரோஹிங்கியா அகதிகளை மிரிஹான குடிவரவுத் தடுப்பு மையத்திற்கு மாற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
“இலங்கை ஒரு வளரும் நாடாக இருப்பதால், சர்வதேச அகதிகளின் மையமாக இலங்கையை நாங்கள் ஊக்குவிக்கவில்லை. எங்கள் யதார்த்தத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், அகதிகள் தொடர்பான சர்வதேச தரத்தின்படி அவர்கள் தங்களை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ”என்று அவர் கூறினார்.
இதேவேளை, இங்கு கருத்து வெளியிட்ட பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ, தற்போதைய நெருக்கடியானது அகதிகளைப் பாதுகாப்பதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதற்கும் அரசாங்கம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அனுமதித்துள்ளது என்று கூறினார்.
கடந்த டிசெம்பர் 19 ஆம் திகதி இலங்கை கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்களால் 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மீட்கப்பட்டு முல்லைத்தீவு கேப்பாபுலவுவில் உள்ள இலங்கை விமானப்படைத் தளத்தின் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.