தாய்லாந்து செல்ல கட்டுநாயக்க வந்த முத்துராஜா
தாய்லாந்தில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட "சக்சுரின்" அல்லது "முத்துராஜா" என்ற யானை இன்று (02) காலை தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட "சக்சுரின்" அல்லது "முத்துராஜா" என்ற யானை இன்று (02) காலை தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த யானை தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யானையை ஏற்றிய விமானம் காலை 07.30 மணியளவில் தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய்லாந்தில் இருந்து வந்த விசேட விமானம் மூலம் யானை மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகந்தா தெரிவித்தார்.
தாய்லாந்தில் இருந்து இந்நாட்டிற்கு வந்த மூன்று கால்நடை வைத்தியர்கள், ஒரு யானைப் பண்ணையாளர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் இந்தப் பயணத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த விமானத்திற்காக தயாரிக்கப்பட்ட விசேட கூண்டுடன் பழகுவதற்கு "முத்துராஜா" யானைக்கு சுமார் ஒரு மாத காலம் பயிற்சியளிக்கப்பட்டதாகவும் திலக் பிரேமகாந்த தெரிவித்தார்.
2001 ஆம் ஆண்டு தாய்லாந்து அரசாங்கம் "சக்சுரீன்" என்ற யானையை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.
ஆனால் இந்த யானையின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், அதனை தாய்லாந்திற்கு கொண்டு செல்ல அந்நாட்டு அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருந்தது.