இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் 'PAPON LIVE'

இந்நிகழ்வுக்கு சபையோரிடமிருந்து கிடைத்த அளப்பரிய வரவேற்பு இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பு மற்றும் கலாசார இணைப்பினை பிரதிபலித்திருந்தது.    

ஜனவரி 23, 2025 - 23:41
ஜனவரி 23, 2025 - 23:42
இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் 'PAPON LIVE'

2025 ஜனவரி 26ஆம் திகதி கொண்டாடப்படும் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், அதன் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்துடன் இணைந்து 2025 ஜனவரி 22ஆம் திகதி PAPON Live நிகழ்வை ஒழுங்கமைத்திருந்தது. 

நெலும் பொக்குண கலையரங்கத்தில் நடைபெற்றிருந்த இந்நிகழ்வில், பதில் உயர் ஸ்தானிகர் டாக்டர் சத்யாஞ்சல் பாண்டே, இலங்கையின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, தொழில் கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவஹே, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மற்றும் தொழில் துறை பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய சிரேஷ்ட பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். 

கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையால் பரிந்துரைக்கப்பட்ட இந்திய கலைஞரும் பப்பொன் என நன்கறியப்பட்டவருமான அங்காராக் மஹந்தாவின் மெய்மயக்கும் ஆற்றுகை இம்மாலைப்பொழுதின் முக்கிய அம்சமாக காணப்பட்டது. விருதுபெற்ற பொலிவூட் பின்னணிப் பாடகரான பப்பொன் பாடகர், இசைக்கருவிகளை இசைக்கும் விற்பன்னர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் மேடைக் கலைஞர் என பன்முகங்களையும் கொண்ட ஓர் இசை விற்பன்னராக திகழ்கின்றார். 

இந்திய நாட்டுப்புற பாடல்கள், சாஸ்திரிய இசை மற்றும் சமகால இசை வடிவங்கள் ஆகியவற்றின் சங்கமத்தால் பப்பொன் லைவ் நிகழ்வு சபையோரை  மிகவும் கவர்ந்திருந்தது.

அதேவேளை, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான செழிப்பான கலாசார பிணைப்பினை காண்பிக்கும் வகையில் ஸ்வஸ்தி என்ற பெயரிடப்பட்ட ஆற்றுகையுடன் இம்மாலை நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன. இலங்கையின் சிறந்த தாளவாத்தியக் கலைஞரான ரவிபந்து வித்யாபதி மற்றும் அவரது குழுவினர் இந்திய பாடல்கள், இந்திய தேசியப் பாடலான, வந்தே மாதரம் ஆகியவை உள்ளிட்ட மெல்லிசைப் பாடல்களை இலங்கையின் பாரம்பரிய இசையுடன் கலந்து வழங்கியிருந்தனர். 

இந்த இசை சங்கமத்தில் இலங்கையின் பாதுகாப்பு மற்றும் சிவில் சேவை அதிகாரிகள், இராஜதந்திரிகள், கல்வியாளர்கள், வியாபார மற்றும் ஊடக சமூகத்தினர், புலம்பெயர் இந்தியர்கள் மற்றும் இந்தியாவின் நண்பர்கள் உட்பட ஆயிரத்துக்கும் அதிகமான ஆர்வமிக்க விருந்தினர்கள் கலந்துகொண்டிருந்தனர். 

இந்நிகழ்வுக்கு சபையோரிடமிருந்து கிடைத்த அளப்பரிய வரவேற்பு இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பு மற்றும் கலாசார இணைப்பினை பிரதிபலித்திருந்தது.    

'PAPON LIVE' Full Video Link : https://www.facebook.com/share/v/1ET8wK1wj5/

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!