பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதி; மரணத்தில் சந்தேகம்
அங்கு அவருக்கு சேலைன் ஏற்றப்பட்ட சிறிது நேரத்தின் பின்னர் கை மற்றும் கால்கள் நீல நிறமாக மாறி, கீழே வீழ்ந்ததாக யுவதியின் தாயார் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Colombo (News21) பேராதனை போதனா வைத்தியசாலையில் யுவதி உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் நிலவுகின்றது.
கடந்த திங்கட்கிழமை வயிற்றுப்போக்கு காரணமாக கெட்டபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் 21 வயது சமோதி சங்தீபனி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்றிரவு அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற அவர், பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக நேற்று காலை மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு சேலைன் ஏற்றப்பட்ட சிறிது நேரத்தின் பின்னர் கை மற்றும் கால்கள் நீல நிறமாக மாறி, கீழே வீழ்ந்ததாக யுவதியின் தாயார் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அவருக்கு ஊசி ஏற்றப்பட்ட பின்னர் உடல் எரிவதாகக் கூறியதால், மீண்டும் ஓர் ஊசி ஏற்றப்பட்டதாகவும் அதனையடுத்து கண்கள், வாய் எரிவதாக சமோதி சங்தீபனி தனது தாயிடம் கூறியதாகவும் அவரின் தந்தை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்நிலையில், ஏற்றப்பட்ட ஊசியில் பிரச்சினை இருப்பதாக சங்தீபனியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜூன திலகரத்ன தெரிவித்தார்.
எனினும், சிகிச்சை அளிக்கப்பட்ட போது குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாகவும் அதற்கான காரணம் இன்னமும் அறியப்படவில்லை எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஊடகங்களுக்கு கூறினார்.
சிக்கல்களுக்கு உள்ளான எந்தவொரு மருந்தும் அவருக்கு வழங்கப்படவில்லை எனவும் அவருக்கு வழங்கப்பட்ட மருந்து வைத்தியசாலையில் ஏனைய நோயாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பேராதனை போதனா வைத்தியசாலையில் ஏற்கெனவே Bupivacaine என்ற மயக்க மருந்து வழங்கப்பட்ட நிலையில், இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக news1st அறிக்கையிட்டுள்ளது.