கத்தியால் பொலிஸாரை தாக்க முயன்றவர் துப்பாக்கிச் சூட்டில் பலி!
துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபரின் கால் மற்றும் மார்புப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை, வெலிகந்தைப் பகுதியில் கத்தியுடன் பொலிஸாரைத் தாக்க முயன்ற நபர் மீது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 வயதான அந்நபர் உயிரிழந்துள்ளார்.
வெலிக்கந்தை பகுதியில் நேற்று (12) மாலை மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
எனினும், குறித்த மோட்டார் சைக்கிள், பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றதுடன், பின்னர் அதன் செலுத்துனர் வீட்டிற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள், குறித்த நபரைப் பின்தொடர்ந்து வீட்டிற்குச் சென்றபோது, அவர் கத்தியால் பொலிஸாரைத் தாக்க முயற்சித்துள்ளார்.
இதன்போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபரின் கால் மற்றும் மார்புப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் இதற்கு முன்னர் 7 போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சந்தேகநபராக காணப்பட்டதுடன், தற்போது மேலும் இரண்டு குற்றவியல் வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை எதிர்கொண்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஏனைய இருவரையும் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.