நிகழ் நிலைக்காப்புச் சட்டமூலத்துக்கு எதிராக 45 மனுக்கள் தாக்கல்!
இச்சட்டமூலத்துக்கு எதிராக அதிகளவான ஊடகவியலாளர்கள் இம்முறை மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

இலங்கையில் நிகழ்நிலை காப்பு (இணையப் பாதுகாப்பு) சட்டமூலத்துக்கு எதிராக மேலும் 11 மனுக்கள் உயர்நீதிமன்றத்துக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
அதற்கமைய, நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு எதிராக இதுவரை 45 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளது என்று சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்துக்கு அறியப்படுத்தியுள்ளார்.
சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் இணையவழி பாதுகாப்புச் சட்டமூலம் தொடர்பான திருத்தங்கள் நாடாளுமன்றக் குழுநிலை கூட்டத்தின்போது முன்வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிகளவான ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் மனுதாக்கல்
இணையங்கள் ஊடாக ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக எனக்கூறிக்கொண்டு, அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள "நிகழ் நிலைக்காப்புச் சட்ட மூலம்" அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடக்கோரி, இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் ஐவரும், சிவில் செயற்பாட்டாளர்கள் நால்வருமாக உயர்நீதிமன்றத்தில் சிறப்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இதன்படி, இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன, செயலாளர் எம்.எப்.எம். பஸீர், ஏற்பாட்டாளர் ஷாலிக விமலசேன, பொருளாளர் நிரோஷ் மைத்திரி, உபதலைவர் நிரோஸ்குமார், மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச பயிற்றுவிப்பாளர் ருக்கி பெர்ணான்டோ, மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் சட்டத்தரணி சுரேன் டி.பெரேரா, செயற்பாட்டாளர் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் அநுருத்த பண்டார, சட்டப் பட்டதாரி டிஷாரா பெர்ணான்டோ ஆகியோரே, இலக்கம் SC/SD/120/23 என்கிற சிறப்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இச்சட்டமூலத்துக்கு எதிராக அதிகளவான ஊடகவியலாளர்கள் இம்முறை மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
சிரேஷ்ட ஊடகவியலாளர்களான டி.நடராசா, துமிந்த சம்பத், லசந்த ருகுணுகே, சாந்த விஜேசூரிய, றிப்தி அலி உள்ளிட்டோர் இதுவரையில் உயர்நீதிமன்றில் மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.