அரச அலுவலகங்களுக்கு விடுமுறை சுற்றறிக்கை இன்று வெளியாகும்

வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசிய அரச சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்க நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

ஜுன் 15, 2022 - 11:52
அரச அலுவலகங்களுக்கு விடுமுறை சுற்றறிக்கை இன்று வெளியாகும்

எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த வாரம் முதல்  வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச அலுவலகங்களுக்கு விடுமுறையை அறிவிப்பதற்கான சுற்றறிக்கை இன்றிரவு வெளியிடப்படவுள்ளது.

அரச சேவைகள், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்களுடன் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசிய அரச சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்க நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

அதேநேரம், சிரேஷ்டத்துவம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரச சேவையாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்புவதற்கான ஏற்பாடுகளில் திருத்தங்களை அறிவிக்கும் சுற்றறிக்கையும் இன்றிரவு வெளியிடப்பட உள்ளது

இதற்கும் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

05 வருடங்கள் சம்பளமற்ற விடுறை

கல்வி அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அரச உத்தியோகத்தர் ஒருவர் தனது பணிக்காலத்தில் உயர்ந்தபட்சம் 05 வருடங்கள் சம்பளமற்ற விடுறையைப் பெற்றுக் கொள்வதற்கு தற்போது ஏற்பாடுகளின் பிரகாரம் இயலுமை உள்ளது.

ஆனாலும், குறித்த காலப்பகுதியில் ஓய்வூதியக் கணிப்பைக் கருத்தில் கொள்ளாமை, சிரேஷ்டத்துவத்தைப் பாதிக்கின்றமை மற்றும் ஏனைய நிபந்தனைகளால் அரச உத்தியோகத்தர்கள் அவ்வாறான விடுமுறையைப் பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

இதனைக் கருத்திற்கொண்டு, குறித்த ஏற்பாடுகளில் திருத்தங்களை மேற்கொண்டு இன்றிரவு சுற்றறிக்கை வெளியிடப்பட உள்ளதாக அரச சேவைகள், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!