LPL தொடரின் வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவுகள் ஆரம்பம்

வெளிநாட்டு வீரர்கள் தங்களுடைய பெயர்களை எதிர்வரும் 23ம் திகதிக்கு (ஜூன்) முன்னர் பதிவுசெய்யவேண்டும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளது.

ஜுன் 15, 2022 - 11:46
LPL தொடரின் வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவுகள் ஆரம்பம்

இலங்கையில் இவ்வருடம் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வெளிநாட்டு வீரர்கள் நேற்று முதல் (14) தங்களுடைய பெயர்களை பதிவுசெய்துக்கொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இவ்வருடத்துக்கான வீரர்கள் வரைவில் இடம்பெறவுள்ள வெளிநாட்டு வீரர்கள் இண்டெர்நெசனல் ரூபி, இண்டெர்நெசனல் ஷப்பீர், இண்டெர்நெசனல் டையமண்ட் ஏ, பி மற்றும் இண்டெர்நெசனல் பிளட்டினம் என்ற பிரிவுகளில் வகைப்படுதப்படவுள்ளனர்.

இண்டெர்நெசனல் ரூபி மற்றும் இண்டெர்நெசனல் ஷப்பீர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் அவர்களுடைய தேசிய கிரிக்கெட் சபைகளில் பதிவுசெய்யப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்பதுடன், அவர்களுடைய நாட்டுக்காக விளையாடியிருக்கவேண்டும். அதேநேரம், சர்வதேசம் அறிந்த வீரர்களாகவும் இருக்கவேண்டும்.

ஏனைய பிரிவு வெளிநாட்டு வீரர்களை பொருத்தவரை, வீரர்கள் அவர்களுடைய நாட்டுக்காக சர்வதேச போட்டிகளில் தற்போது விளையாடும் வீரர்களாக இருக்கவேண்டும். இல்லையெனில் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் சபையின் லீக் தொடர்களில் விளையாடிய வீரர்களாக இருக்கவேண்டும்.

வெளிநாட்டு வீரர்கள் தங்களுடைய பெயர்களை எதிர்வரும் 23ம் திகதிக்கு (ஜூன்) முன்னர் பதிவுசெய்யவேண்டும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளது.

மூன்றாவது தடவையாக ஆரம்பிக்கவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடர் அடுத்த மாதம் 31ம்  திகதி முதல்  ஆகஸ்ட் 21ம் திகதிவரை நடைபெறவுள்ளது. தொடரின் ஆரம்பக்கட்ட போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், பிற்பகுதி போட்டிகள் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!