119 ரன்கள்... கடைசி வரை திக் திக்... இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி?

நியூயார்க்கில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பரபரப்பாக ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது.

ஜுன் 10, 2024 - 14:12
ஜுன் 10, 2024 - 14:13
119 ரன்கள்... கடைசி வரை திக் திக்... இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி?

நியூயார்க்கில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பரபரப்பாக ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. ரோஹித் சர்மா, விராட் கோலி ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் ஓவரில் ரோஹித் சர்மா சிக்ஸர் அடிக்கவே இந்திய அணி 8 ரன்களுடன் தொடங்கியது. 

நசீம் ஷா வீசிய 2வது ஓவரில் கோலி பவுண்டரி அடித்த நிலையில் 3வது பந்தில் கவர் திசையில் அடிக்கமுற்பட்டு உஸ்மான் கானிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பந்த் களமிறங்கினார்.

3வது ஓவரை ஷாகின்ஷா அப்ரிதி வீசினார். 4வது பந்தில் ரோஹித் சர்மா டீப் ஸ்குயர் லெக் திசையில் அடித்த ஷாட்டை ஹேரிஸ் ராப் கேட்ச்பிடிக்கவே 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இரு முக்கிய, பெரிய விக்கெட்டுகளை வீழ்த்திய உற்சாகத்தில் பாகிஸ்தான் அணியினர் இருந்தனர்.

சூர்யகுமாருக்குப் பதிலாக, யாரும் எதிர்பாரா வகையில் அக்ஸர் படேல் களமிறங்கி, ரிஷப் பந்த்திடம் இணைந்தார். நிதானமாக ஆடத் தொடங்கிய அக்ஸர் படேல், அதிரடிக்கு மாறினார். அப்ரிதி வீசிய 5வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்தார்.

6-வது ஓவரை முகமதுஅமிர் வீசினார். முதல் பந்தில் ரிஷப் பந்த் தேர்டுமேன் திசையில் பவுண்டரி அடித்தார். ஆனால், ஸ்லிப்பில் நின்றிருந்த இப்திகார் கேட்ச்சை தவறவிட்டதால் பவுண்டரி சென்றது. 

2வது பந்தையும் ரிஷப் பந்த் தூக்கி அடிக்கவே அந்த கேட்சையும் பாகிஸ்தான் தவறவிட்டது. 5வது பந்தில் ரிஷப் பந்த் மீண்டும் ஒரு பவுண்டரி விளாசினார். பவர்ப்ளே ஓவரில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் சேர்த்தது.

நசீம் ஷா வீசிய 8-வது ஓவரில் அக்ஸர் படேல் இறங்கி அடிக்க முற்பட்டு க்ளீன் போல்டாகி 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த சூர்யகுமார் வந்தவுடன் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார்.

இமாத் வாசிம் வீசிய 8-வது ஓவரில் ரிஷப் பந்த் தூக்கி அடிக்கவே இந்த ஷாட்டிலும் கிடைத்த கேட்சை பிடிக்க பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டனர். ரிஷப் பந்துக்கு மட்டும் கடைசி 14 பந்துகளில் 4 கேட்சு வாய்ப்புகளை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டனர்.

ஹாரிஸ் ராப் வீசிய 10-வது ஓவரில் ரிஷப் பந்த் எஸ்ட்ரா கவர், ஃபைன் லெக், ஆகிய திசைகளில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். 10ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்தது.

இமாத் வாசிம் வீசிய 11வது ஓவரில் ரிஷப் பந்த் ரிவர்ஸ் ஸீவீப் முறையில் பவுண்டரி விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார். ஹாரிஸ் ராப் வீசிய 12-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் 7 ரன்னில் அமீரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 148 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட பந்தை எதிர்த்து அடிக்க முடியாமல் சூர்யகுமார் மிட்ஆப் திசையில் அடிக்கவே கேட்சானது.

அடுத்து, ஷிவம் துபே களமிறங்கி, ரிஷப் பந்துடன் சேர்ந்தார். 13-வது ஓவரை இமாத் வாசிம் வீசினார். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட துபே, வாசிம் பந்துவீ்ச்சுக்கு திணறினார்.

14-வது ஓவரை நசீம் ஷா வீசினார்.களத்துக்கு வந்தது முதல் பேட்டிங்கில் திணறிய ஷிவம் துபே, நசீம் ஷாவிடமே கேட்ச் கொடுத்து3 ரன்னில் வெளியேறினார். 

டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்கள் என்று நம்பப்பட்ட சூர்யகுமார், துபே இருவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். அடுத்து துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கி, ரிஷப் பந்துடன் சேர்ந்தார்.

முகமது அமீர் வீசிய 15-வது ஓவரின் முதல் பந்தில் ரிஷப் பந்த் தூக்கி அடிக்கவே, பாபர் ஆஸம் இந்த முறை சரியாக கேட்ச்பிடிக்கவே 42 ரன்னில் ஆட்டமிழந்தார். 

அடுத்துவந்த ஜடேஜா வந்த வேகத்தில் மிட்ஆப் திசையில் வாசிமிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். 89 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலிமையாக இருந்த இந்திய அணி அடுத்த 7 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. அர்ஷ்தீப் களமிறங்கி, ஹர்திக்குடன் சேர்ந்தார்.

இந்திய அணியின் எந்த பேட்டரும் இந்த ஆடுகளத்தில் சிறப்பாக ஆடமுடியவில்லை. ஆடுகளத்தில் பந்து நினைத்துப்பார்க்க முடியாத வகையில் எகிறியது, சில நேரங்களில் பந்து நின்று பேட்டரை நோக்கி வந்ததால் ஷாட்களை அடிக்க சிரமப்பட்டனர்.

அமீர் வீசிய 17-வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் பவுண்டரி விளாசினார். 2வது பந்தை அர்ஷ்தீப் தோள்பட்டையில் வாங்கி வலியால் துடித்தார். 3வது பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் தொடர்ந்து பெரிய ஷாட்டுக்கு முயன்றும் முடியவில்லை.

ஹாரிஸ் ராப் 18-வது ஓவரை வீசினார். முதல் பந்தில் பாண்டியா தேர்டுமேன் திசையில் பவுண்டரி விளாசினார், 3வது பந்தையும் தேர்டுமேன் திசையில் பவுண்டரிக்கு விரட்ட தடுக்கப்பட்டது. 

4வது பந்தை லெக்திசையில் பாண்டியா தூக்கி அடிக்கவே அது இப்திகாரிடம் கேட்சானது. ஹர்திக் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த பும்ரா வந்தவேகத்தில் இமாத்வாசிமிடம் தூக்கி அடித்து கேட்ச் பயிற்சி அளிப்பதுபோல் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

19-வது ஓவரை அப்ரிதி வீசினார். முகமது சிராஜ் 3 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தார். கடைசிப்பந்தில் ரன் எடுக்க முயற்சிக்கவே, அர்ஷ்தீப் சிங்9 ரன்னில் ரன்அவுட் செய்யப்பட்டார்.

இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ராப், நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி்னர். முகமது அமீர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங்கில் ஒட்டுமொத்தமாக சொதப்பியது. பாகிஸ்தான் அணியின் பீல்டிங்தான் மோசமாக இருந்ததேத் தவிர பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. 

தொடக்கத்தில் இருந்தே பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்டர்களை கட்டம் கட்டி தூக்கினர். குறிப்பாக ரோஹித் சர்மா, விராட் கோலியை விரைவாக ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்ற திட்டத்தோடு செயல்பட்டு அதை செயல்படுத்தினர்.

ரிஷப் பந்த்-அக்ஸர் படேல் மட்டுமே 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மற்ற எந்த பேட்டரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 42, அக்ஸர் படேல் 20 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சம். மற்றவகையில் நடுவரிசையில் எந்த பேட்டரும் சிறப்பாக பேட் செய்யவில்லை.

பாகிஸ்தான் பீல்டர்களுக்கு கேட்ச் பயிற்சி அளித்ததுபோன்று துபே, ஹர்திக் பாண்டியா, பும்ரா, ஜடேஜா ஆகியோர் ஆட்டமிழந்தனர். ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொள்ளாமல் இந்திய பேட்டர்கள் தவறான ஷாட்களை தேர்ந்தெடுத்து ஆடியதே விரைவாக விக்கெட்டுகளை இழக்க காரணமாகும்.

இதைவிட முக்கியமனது, பாகிஸ்தானின் தரமான பந்துவீச்சு. முகமது அமீர், ஹாரிஸ் ராப், நசீம் ஷா ஆகியோர் லைன் லென்த்தில் கச்சிதமாக பந்துவீசியதால் பெரிய ஷாட்களுக்கு இந்திய பேட்டர்களால் முயற்சிக்க முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி தவறான ஷாட்களுக்கு முயன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 89 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்தது. 180 ரன்கள் வரை சேர்க்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது. ஆனால், நடுவரிசை பேட்டர்களின் மோசமான செயல்பாடு, பொறுப்பற்ற பேட்டிங்கால் 60 ரன்கள் குறைவாக சேர்த்துள்ளது.

120 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. புதிய பந்தில் பும்ராவுக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அர்ஸ்தீப் சிங் வீசினார். முதல் ஓவரில் எந்த விக்கெட் வீழ்ச்சியும், திருப்பமும் ஏற்படவில்லை.

2வது ஓவரை சிராஜ் வீசினார். முதல் பந்திலேயே பாபர் ஆஸம் பவுண்டரி விளாசினார். அடுத்தடுத்த பந்துகளை சிராஜ் கட்டுக்கோப்பாக வீசினார். கடைசிப்பந்தை ரிஸ்வான் அடிக்கவே சிராஜ் பீல்டிங் செய்து ஸ்டெம்பை நோக்கி எறிந்தார். ஆனால், ரிஸ்வான் வலது முழங்கையில் பந்து படவே வலியால் துடித்தார்.

3வது ஓவரை பும்ரா வீசினார் பவுண்டரி அடிக்க ரிஸ்வான், பாபர் ஆஸம் முயன்றும் முடியவில்லை. ரிஸ்வான் அடித்த ஷாட்டை தேர்டுமேன் திசையில் நின்றிருந்த ஷிவம் துபே கேட்சை கோட்டைவிட்டார்.

பும்ரா வீசிய 5வது ஓவரில் பாபர் ஆசம் பவுண்டரி அடித்து ரன்களைச் சேர்த்தார். அடுத்த பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து பாபர் ஆஸம் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.அடுத்து உஸ்மான் கான் களமிறங்கி, ரிஸ்வானுடன் சேர்ந்தார்.

6-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். பவர்ப்ளே ஓவரை பயன்படுத்திய ரிஸ்வான் சிக்ஸர் விளாசி ரன்களைச் சேர்த்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் ஒருவிக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் சேர்த்தது. சிராஜ் வீசிய 7-வது ஓவரில் ரன் சேர்க்கத் திணறிய பாகிஸ்தான் அணி 3 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

8-வது ஓவரை ஜடேஜா வீசினார். ரிஸ்வான், உஸ்மான் இருவரும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து சிங்கிள் ரன்னாக சேர்த்தனர். பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுக்க இந்திய அணி விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியி நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.

9-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். உஸ்மான் கவர் திசையில் பவுண்டரி அடித்து ரன்களைச் சேர்த்து 9 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 50 ரன்களைக் கடந்தது.

10-வது ஓவரை ரவீந்திர ஜடேஜா வீசினார். முதல் 4 பந்துகளில் தடுமாறிய ரிஸ்வான் 5வது பந்தில் பவுண்டரி அடித்து ரன்களைச் சேர்த்தார். 11வது ஓவரை அக்ஸர் படேல் வீசவந்தார். 

முதல் பந்திலேயே உஸ்மான் விக்கெட்டை கால்காப்பில் வாங்கவைத்து 13 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து ஃபக்கர் ஜமான் களமிறங்கினார். 4வது பந்தில் ஜமான் சிக்ஸர் விளாசினார்.

12-வது ஓவரை அர்ஷ்தீப் வீசினார். முதல் பந்திலேயே ஜமான் தேர்டுமேன் திசையில் பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் பாகிஸ்தானுக்கு 6 ரன் கிடைத்தது.

13-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். ஹர்திக் வீசிய பவுன்ஸரில் தேவையின்றி ஷாட் அடிக்க முற்பட்டு ஜமான் 13 ரன்னில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

அடுத்து இமாத் வாசிம் களமிறங்கினார். இந்த ஓவரில் ஒரு ரன் மட்டு்மே பாகிஸ்தான் அணி எடுத்து ஒரு விக்கெட்டையும் இழந்தது.

14-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இமாத் வாசிம், பேட்டில் பட்டு அவுட்சைட் எட்ஜில் பட்டு பவுண்டரி சென்றது. இந்த ஓவரில் பாகிஸ்தான் அணி 7 ரன்கள் சேர்த்தது.

பாகிஸ்தான் வெற்றிக்கு கடைசி 6 ஓவர்களில் 40 ரன்கள் தேவைப்பட்டது. விக்கெட் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. 15-வது ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்திலேயே ரிஸ்வானை க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார் பும்ரா. 

களத்தில் செட்டில் ஆன ரிஸ்வானை 31 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து சதாப் கான் களமிறங்கினார்.இந்த ஓவரில் பும்ரா 3 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி நெருக்கடி அளி்த்தார்.

16-வது ஓவரை அக்ஸர் படேல் வீசினார். இமாத் வாசிமிற்கு படம் காட்டிய அக்ஸர் படேல், 2 ரன்கள் மட்டுமே கொடுத்து நெருக்கடியளித்தார். பாகிஸ்தான் வெற்றிக்குத் தேவையான ரன்ரேட் 9ஆக அதிகரி்த்து நெருக்கடி அதிகரித்தது.

17-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். ஹர்திக் 3வது பந்தை ஷார்ட் பாலாக வீசவே, சதாப் கான் தூக்கி அடிக்கவே ரிஷப் பந்த் கேட்ச் பிடித்தார். சதாப்கான் 4 ரன்னில் ஆட்டமிழந்து பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்படுத்தினார். 

அடுத்து இப்திகார் அகமது களமிறங்கினார். இந்த ஓவரில் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டை இழந்து 5 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் வெற்றிக்கு 18 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது.

சிராஜ் வீசிய 18-வது ஓவரில் பாகிஸ்தான் அணி 8 ரன்களைச் சேர்த்தது. கடைசி 12 பந்துகளில் பாகிஸ்தான் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது.

19-வது ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்த பும்ரா, அடுத்த 2பந்துகளை டாட் பந்துகளாக வீசினார். 4-வது பந்தில் இப்திகார் ஒருரன்னும், 5வது வந்தில் வாசிம் ஒரு ரன்னும் எடுத்தார். 

கடைசிப்பந்தை பும்ரா ஃபுல்டாஸாக வீச இப்திகார் தூக்கி அடிக்கவே அர்ஷ்தீப் சிங் கேட்ச் பிடித்தார். இப்திகார் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். பும்ரா இந்த ஓவரில் 3 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் இமாத் வாசிம் 15 ரன்னில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த 5 பந்துகளில் பாகிஸ்தான் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது.

அடுத்து நசீம் ஷா களமிறங்கினார். 2வது பந்தில் நசீம் ஷா ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தில் அப்ரிதி ஒரு ரன் எடுத்தார். 4வது பந்தில் நசீம் ஷா பவுண்டரி அடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். கடைசி 2 பந்துகளில் பாகிஸ்தான் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. 

5வது பந்தில் நசீம் ஷா பவுண்டரி அடித்தார். கடைசிப்பந்தில் பாகிஸ்தான் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. கடைசிப்பந்தில் நசீம் ஷா ஒரு ரன் அடிக்கவே பாகிஸ்தான் 6 ரன்னில் தோல்வி அடைந்தது.

இந்தியத் தரப்பில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அக்ஸர் படேல் 2 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் சாய்த்தார்.

(BBC TAMIL)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!